Friday, May 15, 2009

நாம் என்ன செய்யப்போகிறோம்?

தீபத்தை ஏற்றுவது போல
தீக்குண்டுகளை இயக்கி
உடல் சிதறப் புறப்படும்
பெண் பிள்ளைகளை
எந்தச் சர்வாதிகாரம்
வீழத்த முடியும்?

மொழி நில உரிமைகளில் நம்
எருமைத்தனம் செய்த கேட்டைத்
துடைக்கும் நாள் பக்கத்தில்
கண்ணில் இருக்கிறது
நண்பர்களே
கனவு பலிக்கும் காலம்.

விண்ணை முட்டும் ஈழக்கொடி
பகை மண்ணதிரப் பறக்கும்நாளில்
வெட்கமற்று வந்துநிற்கும் இந்தத்
துரோகப்புழுக்கள் நம் தம்பியை
உச்சி முகர்ந்து மெச்சிநிற்கும்.

இன்றைய துயர் பொழுதில்
என்ன செய்யலாம்?
நகங்களில் குருதி உறைந்திருக்க
கண்களில் குழிகளே எஞ்சியிருக்க
மலக்குடலில் ஈமொய்க்கும்

மொத்தப்பிணங்களில், நம் பெண்கள்
தன் வீட்டு ஆண்களைத் தேடிக்
கண்டெடுத்துப் புதைக்கின்றன.
வதைத்துத் சிதைக்கப்பட்டு
சுருட்டிப் புதைக்கப்பட்ட
காணாப் பிணமாகக்
காதலியை தாய்தங்கையை
கண்டுகதறும் ஈழ மகனுக்கு
உயிர் கூட மிச்சமில்லை.

பயந்து பதறிப் புதைந்த குழந்தையின்
பிஞ்சுப் பூங்குரல்
மண்ணெங்கும் தேம்பியழ
கொத்துக்குண்டுகளில் சிதறிய
குடும்பமாய் நம்மவர்களின்
சதைத் துண்டுகள்.

நாம் என்ன செய்யலாம்?
ஐயகோ ஐயகோ எனக்
கக்கத்தில் இருப்பவர்க்குக்
கடுதாசியும் தீர்மானமும்
“சும்மாங்காச்சுக்கும்” என்ற
பின்குறிப்போடு எழுதும் ஒருவரை
உடன் பிறப்புகள் நம்புகின்றனர்.

பேச்சுவார்த்தை மூலம்தான்
தீர்வென்று செல்லிவிட்டால்
நடுவணரசு நீடூழி வாழ்கவெனப்
புகழும் ஒருவரைத் தொழுபவர்களே!
பேச்சுவார்த்தைக்கு உங்கள்
மத்திய அரசு
சோடா வாங்கி அணுப்புகிறதா
ரேடார்தானே அணுப்புகிறது?

பதவி ஆசையை மன்னிக்கலாம்
நண்பர்களே! உறவுகளே!
நமது ஈழப் போராட்டத்தை
ஆதரித்து ஒரு வார்த்தைபேச
உடன் வந்து களம்நிற்க ;
முதல்வரின் குடும்பத்
துணைக்கண்டத்தில் ஒருவர் கூட
இல்லையே உடன்பிறப்புகளே!

இந்தச்சிக்கல்
பதவிக்காலமற்ற நாளில்
வந்திருக்கக்கூடாதா என
இன்றைக்கு ஏங்கிவிட்டு பிறகு
நம்படைக்கு தலைமையேற்க வருவார்.
உடன்பிறப்புகளே!

பதவி ஆசை சரி இருக்கட்டும்,
தீக்குளித்த தங்கங்களும்
தமிழகத்துக் கொந்தளிப்பும்
செய்தியாகச் சொல்லவும்
முதல்வரின் செய்தியலைவரிசைக்கு
மனமில்லாமல் போனபின்னும்
நம்பணுமா உடன்பிறப்புகளே?!

நிகழ்காலச் சாணக்கியத்தை
ஒற்றைத் தீக்குச்சியாய்
மோதியழித்த சுரும்புலியாய்
முத்துக்குமரன் சிதைந்தானே புரியலையா?
உங்கள் ரத்தம் கொதிக்கலையா?

“போர் என்றால் சாவு விழும்
தமிழர் சாவது சரியென்று பேசும்
“பெண்” களங்கப் பிறப்பொன்றை
இதயக்கனியின் இடத்தில்
ஏற்றிவைத்த ரத்தங்களே
உங்களுக்குச் சம்மதமா?

நாய்துரத்த ஓடுகிறது குழந்தை
நாயை அணைத்துக் கொஞ்சி
குளிரூட்டிய மாளிகையில் அமர்ந்து
கண்டிக்கிறார் குழந்தையை
“கல்லைக் கீழே போடு குழந்தாய்
அப்போதான் அம்மா நான்
ஆதரவாய் வருவேன் என்று.
அவரவர்கள் சாதித்துவிட்டார்கள்
ஆயிரம் தலைமுறைக்கு
அரச வாழ்க்கை கண்டுவிட்டார்
ரத்தத்தின் ரத்தங்களே!
உடன்பிறப்புகளே! நீங்கள்
தொண்டராய் இருந்து
என்ன சாதித்தீர்கள்??
களத்திற்கு வாருங்களேன்
கரம் சேர்த்து ஈழம் காக்க.

“பிணங்களான பிறகும்
புணர்ந்துபோகும் ராணுவநாயை
எப்படியாவது கொன்றுபோடேன்”
பெண்பிள்ளை அழுகுரல்
உங்களுக்குக் கேக்கலையா?
உயிர்வாழத்துடிக்கும்
ஈழப் பிள்ளைகள்
நம் உள்ளங்கையில்
முகம்புதைத்து அழுவது
கைகளில் கனக்கலையா?

எங்களை அலற அலறவிட்டுச்
சிதைத்தவரைப் பார்த்து
தாய்த் தமிழகமே மொத்தமாய்
மூச்சுவிடேன் பற்றட்டும் நெருப்பென
இளையோர் ரணங்கள்
உங்கள் நெஞ்சில் தெறிக்கலையா?
தங்கப் பூம்பாதம்
தண்ணிபடக் கொப்பளிக்கும்
பிஞ்சுக் குழந்தைகள்
வெடித்துச் சிதறக் கண்டும்
தொண்டுசெய்து தொண்டுசெய்தே
உணர்ச்சியற்றுப் போனீர்களா?

கரம்கோர்த்து ஈழம்காக்க
களத்திற்கு வாருங்களேன்
இதயத்துத் தமனிகளே
இனமானச் சொந்தங்களே
நாம் என்ன செய்யப்போகிறோம்?

மூன்று லட்சம் சொந்தங்கள்
மரணக் குழியில் மயங்க
இத்தாலியப் பெண்ணை
அன்னையென்று மலர்தூவி
தொப்பூழ்கொடி உறவுகளின்
இழவிற்கு மகிழ்பவர்களை
நாம் என்ன செய்யப்போகிறோம்?

இனமே அழியட்டும்
கூரைமாற்ற உதவுவோம் என்பவர்
வேண்டுதல் குருடர்கள்
கண்திறக்க மறுப்பவர்கள்
வீம்பிற்குச் சிங்களரின்
பாதம் நக்கிச் சிரிப்பவரின்
புறம் கழுவும் பூசாரிகளாய்
இங்கே கதர்வேட்டிகள்.

186 பேர்சுடப்பட்டதற்காக
மாதக்கணக்காய் அலறுகிறார்
கழிவறையில் இருக்கும்போதும்
கண்டித்தபடியே இருக்கிறார்.
பிரான்சு அதிபரிடம்
சீக்கிய டர்பனிற்காக
உருகிவேண்டும் ஒருவருக்கு
தமிழர் மரணஓலம்
மகிழ்ச்சியாய்ப்படுகிறது

ஆயுதத்தைக் கீழேபோட்டால்
அமைதிபேசுவோம் என்னும்
அறிவாளிகளே!
தமிழக மீனவன் எந்த
ஆயுதம் கொண்டு மீன்பிடிக்கிறானாம்?
அதுசரி நீங்கள்
கோஷ்டிச் சண்டையைக் கீழே
போட்டதுண்டா? போட்டுத்தான்
வாக்குக்கேட்டு வருகிறீர்களா?

முதுகெலும்பே இல்லாதவர்
முதுகில் வலியென்றும்
இருதயமே இல்லாதவர்
இருதய அறுவை என்றும்
ஒருசேரச் சொல்வதுதான்
நடுகல்லும் சிரிக்கும் அதிசயம்.
ஆயுதங்களைப் பார்த்துப்பேச
தைரியம் அற்றவர்கள்
கவசங்களைக் கழற்றச்சொல்லி
கத்திக் கொண்டிருக்கிறார்கள்
முப்பத்தைந்து வருசமாக.

இதயத்துத் தமனிகளே
இனமானச் சொந்தங்களே
கோரிக்கைகள் யாரைநோக்கிக்
கேட்கப்படுகிறதோ அதுதான்
வெற்றிதோல்வியைத்
தீர்மானிக்கும் நண்பர்களே!

எவர் வாயிலிருந்து நமது
ரத்தமும் சதையும் வழிகிறதோ,
குட்டிமனியின் கண்கள்
வெறித்து விழிக்கிறதோ
அவர்களிடம் கேட்கிறோம் நாம்
போர்நிறுத்தத்தை ஈழத்தை.

சட்டக்கல்லூரிச் சண்டையை
தடுக்க நினைக்காதவர்களா
இலங்கைச் சண்டையை
நிறுத்தப் போகிறார்கள்?
செத்துக் கொண்டிருக்கும்
இந்தியத் தமிழனைக் காப்பாற்றாத அரசா
இலங்கைத்தமிழரைக் காக்கப்போகிறது?

இறையாண்மை என்னும்
யோக்யதை இல்லாதவர்
இன்னொருவன் இறையாண்மைபற்றி
இங்கேதான் பேசுகிறார் சொந்தங்களே!
தன்னாட்டுக் கடைசி மனிதரையும்
காப்பாற்றுவது இறையாண்மை
மும்பையில் நீ முட்டாளானதை
உலகம் கண்டு கொண்டது.
தமிழகக் கடற்கறையில் நீ
தெரிந்தே பெட்டையாய் நிற்கிறாய்.

சிங்களன் இயக்கும் துப்பாக்கிகள்
இந்திய இறையாண்மையைக்
கிழித்து நிர்வாணமாக்குவதை
ரசிக்கும் மேதைகள் நீங்கள்;
தேச உணர்வோடு சர்வாங்கமும்
கூசும்பேதைகள் நாங்கள்
நான் சொல்லவில்லை தமிழனின்
வாயாம் சீமான் சொல்லவில்லை.
சிங்களக் கடற்படைக்கூலியாளும்
காசுக்கு மாரடிக்கக்
கப்பலில் வந்தவனும்
கைகொட்டிச் சிரிக்கிறார்கள்
காங்கிரஸ் கெடுத்த இறையாண்மையை

இதயத்துத் தமனிகளாய்
கரம் கோர்த்துத் துணைநிற்கும்
இனமானச் சொந்தங்களே!
ஒரு நாய்க்கு நாம்
வாக்களித்திருந்தாலும் அது
நமக்காகக் குரைத்திருக்கும்; நமை
விரல்நீட்டினாலே கடித்திருக்கும்.
போட்டா நாய் வாயில்
போடா விட்டால் பேய்வாயில் என
விட்டேத்தியாய் நாம் செய்தபாவம்
நம்தலையில் மட்டுமின்றி
ஈழத்தலையிலும் வெடிக்கிறதே,
நாம் ஏற்றிவைத்த நாற்காலிப்புழுக்கள்
நமக்காகத்துடிக்கும் நல்லாரையும்
பிரித்துவைத்துக் கெடுக்கிறதே

மூன்றுகட்சித் தொண்டர்களே!
நம்பிக்கிடக்கும் நல்லவர்களே!
இன்றைய தமிழகத்தில்
தேசியம் பேசும் தமிழன்
ஒருவன் முட்டாள்
இன்னொருவன்
பத்துக்கோடித் தமிழருக்கும்
பச்சைத் துரோகி.

ஓங்கியயழுந்த போராட்டமும்
ஆறுமாத வேதனையும்
எந்தச் சாவையும் தடுக்கவில்லை
தமிழன் ஒருவனைக் காக்கவில்லை.
குப்பிகடிக்கும் போராளி
ரவையின்முன்பு வயசுப்பிள்ளை
பதுங்கு குழியில் சிறுபிள்ளை
ரத்தஉறவு நாதியற்றுக் கிடக்க ;
ஆயுதமாய் கவசமாய்
நம்குரல்கள் மாறலையே!

துண்டுபட்ட கையை
நாயிழுக்குமென
தானெடுத்துப் புதைத்துவிட்டு
ஓலமிட்டு அழும்பிள்ளைகள்.
உங்கள் பிள்ளைகள்
உங்கள் வீட்டுப்
பெண்களுக்கு எவனோ
கருக்கலைப்புச் செய்கிறான்
என்ன செய்யப் போகிறீர்கள்?!

ஈழக்கொடி மக்கள் காக்க
இவனைப் போகவைக்கணும்
சேருங்கள் சொந்தங்களே!
நமக்கான எண்ணங்களோடு
நமக்கான உரிமைக்குரலோடு
எந்த இடியாலும் அசைக்கமுடியாத
சுரணையற்ற மக்களுக்கான
அக்கறையோடும் ;
கொந்தளிக்கும் முத்துக் குமரன்களை
தேடிச்சேருங்கள் நண்பர்களே!

எவனெவனின் உள்ளாடைகளையும்
ஏந்திக்கிடக்கும் நமது
இளைய போர்வாள்களைத்
துடைத்து எழுப்புங்கள் உறவுகளே!
பதுங்கு குழிக்குள்
தொலைக்காட்சி வைக்கப்படும்
போரின் சத்தத்திலிருந்து
மக்களைக்காக்க இலவசப்
பஞ்சும் பாட்டுப்பாடும்.

குண்டுவிழும் வைத்தியசாலையில்
இலவச உணவும்
இறந்தவர் குடும்பத்திற்கு என்
சொந்தப் பணத்திலிருந்து
இழவுக் காசும் வழங்கப்படும் என
தீர்வுத் திட்டங்கள்
முன்வைக்கப்படும் முன்பு ;
முத்துக்குமரன்களைத்
தேடிச் சேருங்கள் நண்பர்களே!

கட்டியழ நாதியற்ற கூட்டமானோம்;
தொட்டுத்தூக்க மக்களற்ற பிணங்களானோம்
எத்திச்செல்லும் நாட்டில் உசிரு
பத்திச்சாவுது மொத்தமா அதத்
தடுக்கப்பார்த்தும் ஏலாமத்தான்
வதைபடுறோம் மிச்சமா?

பேரணியா நாமநின்னா
மாட்டுமந்தன்னு தள்ளுரான்
உரிமைகேட்டு உயர்த்தும் குரலை
தாலாட்டுன்னு தூங்குறான்.
முட்டித்தூக்கும் கொம்புகளையே
சுகமெனச் சொரியும் நோயாளி இவன
எளிய சனமும் அலறச்செய்யனும்
வழிகண்டு நாம போராடணும்.

யுகங்களைத் தின்று கடற்கோளைப்
புறந்தள்ளித் தகித்தோடும்
காட்டாறு நம் தமிழ்ரத்தம்
அதில் ஒரு சொட்டு உலகில்
மிச்சமுள்ள வரையில்
தோற்காது நமது போராட்டம்.
எல்லாப் பகையும்
பொல்லாத் துரோகமும் நம்
செருப்பினுள் மிதிப்பட்டுக் கிடக்கணும்.
நல்லது கெட்டது நாலும் தெரிந்த
போராளியாய் பிள்ளை வளர்க்கணும்.

கட்டியழச் சொந்தமுண்டு
தொட்டுத்தூக்க மக்களுண்டு
விதைகுழியில் விழுந்ததெல்லாம்
விருட்சமாக்கும் (தமிழ்) மண்ணுண்டு
பிரச்சனை எதுவும் தீரக்கூடாதென்னும்
ஒற்றைப் புள்ளியில் அரசியல். அதில்
மாட்டிக் கொண்டவர் தடம்மாறலாம்.
நம்மைநாமே காத்து நிற்கணும்.

தயவு செய்து ஒற்றுமையாய்
ஈழம் காக்க நில்லுங்கள்
துரோகக் கட்சிகளைத்
தீர்த்துக் கட்ட
இணைந்து நில்லுங்கள்!
- கலை இலக்கியா
-தேனியில் நடைபெற்ற “ஈழத்துயரமும் தீர்வும்” பாவரங்கத்தில் (கவியரங்கம்) படிக்கப்பட்ட பா இது

No comments: