Thursday, February 18, 2016

இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா? --- மஞ்சை வசந்தன்


ஆதிக்க சக்திகள் அறிவியலை எப்படியெப்படியோ தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
gene 300ஒழிந்து போயிருக்க வேண்டிய புராணக் குப்பைகள், சாஸ்திரங்கள், இதிகாசங்களுக் கெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மெருகும், கவர்ச்சியும், ஆர்வத் தூண்டலும் ஏற்றி இளைய தலைமுறையை ஈர்த்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து வருகின்றனர்.
ஆதிக்கக் கருத்துக்களை நிலைநிறுத்த அல்லது வளர்க்க அறிவியலை உண்மைக்கு மாறாகப் பயன்படுத்தி வெற்றிபெற முயலுகின்றனர்.
அவ்வப்போது மூக்குடைபட்டாலும் அவர்கள் சூடு,சொரணையில்லாமல் மீண்டும் மீண்டும் இந்த அறிவியல் வழி மடமை பரப்பும் முயற்சியை கைவிடாது முயற்சித்தே வருகின்றனர்.
பிள்ளையார் பால் குடிக்கிறார், அம்மன் கண்கள் அசைகின்றன என்று எதையாவது புதிது புதிதாய்ச் சொல்லி, பக்தியும், கடவுள் நம்பிக்கையும் குறைந்து விடாமல் வளர்க்க முயற்சிக்கின்றனர். அதேபோல், ஜாதியைச் சொல்வதே கேவலமாய்க் கருதும் உளநிலை வளர்ந்து, ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருகி வந்த நிலையில், ஜாதி யென்பது அறிவு சார்ந்தது, அறிவியல் சார்ந்தது என்பதுபோன்ற கருத்தை அண்மையில் அறிவியல் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிஸ் என்ற கல்வி நிறுவனத்தில், மனித மரபணுக்கள் மூலம் ஜாதி அடையாளங்களைக் காணமுடியும் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளனர். ஜாதி யென்பது மனித மரபணு சார்ந்தது அல்ல. அது பாதியில் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட பிரிவினை. ஒருவன் கிறித்தவனாக இருப்பதும், இஸ்லாமியனாக இருப்பதும், இந்துவாக இருப்பதும் எப்படி பிறப்பு வழி திணிக்கப்படுகிறதோ, அவ்வாறே ஜாதியென்ற பிரிவும் பிறப்புவழி திணிக்கப்படுகிறது.
ஜாதி, மதம் இரண்டும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட கருத்து சார் அடையாளங்கள். கருத்து சார் அடையாளத்திற்கும் மரபணுவிற்கும் எந்த வகையில் தொடர்பு வரமுடியும்? அடிப்படை தர்க்கத் தகுதிகூட இல்லாத ஒன்றை ஆய்வு என்று சொல்லி கருத்துக் கூறுவது அறிவியல் போர்வையில் செய்யப்படும் மோசடிச் செயலாகும். ஜாதி யென்பதுகூட இந்தியாவில் ஆரிய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட சதியே அல்லாமல் உலகம் முழுவதும் உள்ளதல்ல. அப்படியிருக்க அதன் அடையாளம் எப்படி மரபணுவில் வரும். மரபணு என்ன இந்தியாவிற்கு மட்டும் உரியதா?
இனத்தின் அடையாளங்கள்தான் மரபணுவில் வரும். காரணம், இனம் என்பது மரபணு சார்ந்தது. ஜாதி வேறு, இனம் வேறு. திராவிடர், ஆரியர், மங்கோலியர், சீனர் என்பன போன்று இயற்கையாய் மரபுவழி அமைந்த பிரிவு இனம். எனவே, இது மரபணு சார்ந்தது. ஆனால், ஜாதி யென்பது மனிதனுக்குச் சூட்டப்பட்டது. அது மரபணுவோடு தொடர்புடையதல்ல.
ஜாதிக்கும், இனத்திற்கும் வேறுபாடு தெரியாத அரைவேக்காடுகளின் அர்த்தமற்ற பிதற்றலே இதுபோன்ற கருத்துக்கள். பாதியில் பிரிக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகூட இன்றைக்கு பல காலக்கட்டத்தில் பல கலப்புகளை ஏற்று வருகிறது. எனவே, இது இன்ன ஜாதிக்கு உரிய மரபணு என்ற கருத்தே முற்றிலும் தவறானது. வன்னியர் அனைவரின் மரபணுவிலும் ஒரே மாதிரியான அடையாளம் இருப்பதில்லை, அவ்வாறே செட்டியார், ரெட்டியார், நாயுடு எல்லாம்... உண்மை இப்படியிருக்க ஜாதிய அடையாளம் மரபணுக்களில் இருக்கிறது என்ற கருத்துப் பரப்பல் மோசடியானது; அறிவியலுக்கும் மனித மேன்மைக்கும் எதிரானது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது தமிழ் சித்தர்
“பறைச்சி யாவ தேதடா?
பார்ப்பனத்தி யாவ தேதடா?
இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்க மிட்டிருக்குதோ?
என்று கேட்டுள்ளார். அவருக்குள்ள அறிவுகூட இன்றைய அறிவியலாளர்க்கு இல்லாதது வெட்கக் கேடு!
- மஞ்சை வசந்தன்

http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/30235-2016-02-10-04-25-19

Friday, November 13, 2015

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை - மா.பொழிலன்
Inline image 1    பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்
பெரியார் நூல் ஒரு பார்வை  -   மா.பொழிலன்

      
மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com
    பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும்.
    அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ...ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன.
    இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது.
    அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம்.
    பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக் கூறிக் கொண்டிருப்பவர்கள் சிலரும்  அவ்வாறு செய்துள்ளனர்.
    அப்படியானால் தமிழ்த்தேசக் கருத்துடையவர்களுக்கு பெரியார் தேவையற்றவரா?  பகைவரா?
    பெரியாரால்தான் தமிழ்த்தேசம் சிதைந்ததா? தமிழ்த்தேசம் எழுச்சி கொள்ளாததற்குப் பெரியாரின் கொள்கைளும் கருத்துகளும் தாம் காரணங்களா?
    இவை குறித்துச் சிந்திக்க வேண்டிய, தெளிந்தறிய வேண்டிய  தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.

    “பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்
    நரியார் நாயகம் இங்கே நடந்திடும்” என்றும், பெரியார் மறைவுற்ற போது,
    “பெரும்பணியைச் சுமந்த உடல் 
        பெரும் புகழைச் சுமந்த உயிர்
             ‘பெரியார்’ என்னும்
        அரும்பெயரைச் சுமந்தநரை
            அழற்கதிரைச் சுமந்த மதி
                அறியாமை மேல்
        இரும்புலக்கை மொத்துதல் போல்
            எடுக்காமல் அடித்தஅடி!
                எரிபோல பேச்சு!
        பெரும்புதுமை! அடடா - இப்
            பெரியாரைத் தமிழ்நாடும்
                பெற்ற தம்மா!”
என்ற வகையில் நீண்டதொரு பாடலும் எழுதினார் பாவலரேறு.
    “பெரியார் பேசிய பேச்சுகளை ஏதென்சு நிகரைச் சுற்றி வந்த சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது. உலகப் பெரும் பேச்சாளர் என்று பெயரெடுத்த தொமசுத்தனிசும் பேசியிருக்க முடியாது. அவர் சுற்றிய தொலைவைக் கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது. அவர் பிரெஞ்சு மாமறவன் நெப்போலியனை விடப் போரிட்டார். உருசிய இலெனினை விடப் பொதுமக்களை நேருக்கு நேராகக் கண்டு பேசினார்.”
    - என்றெல்லாம் விரிவாகச் சிறப்பித்து எழுதியுள்ளார் பாவலரேறு.
     ‘திருவள்ளுவருக்குப் பிறகு தமிழினத்தை மீட்க வந்த தலைவர்களுள் பெரியாரே குறிப்பிடத் தக்கவர்.’
    என்பதாகப் பாவலரேறு ஐயா அவர்கள் பல கூட்டங்களில் பேசியுள்ளார்.
    இக் கருத்துகளெல்லாம் ஏதோ போகிற போக்கில் உணர்வு வயப்பட்டு ஐயா அவர்கள் கூறிவிட்ட கருத்துகள் அல்ல.
    பெரியாரின் மொழியியல் கருத்துகளில் சில பொழுது அவர் பேசிய சில தவறான கருத்துகளைப் பாவலரேறு கடுமையாக அப்போதே அதாவது பெரியார் இருக்கும்போதே நேருக்கு நேராகச் சாடியுமிருக்கிறார்.
    “பெரியார் குமுகாயச் சீர்திருத்தத்தில் -பிராமண
    சூத்திரப் பெரும் போராட்டத்தில் பெரியார்
    தாம்! அதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்மொழி
    பற்றியோ, தமிழர் வரலாறு பற்றியோ பிற
    அறிவியல் செய்திகளைப் பற்றியோ பேசுவதில்
    அவர் சிறியாரே”
     என்றும்,
    “பெரியார் ஈ.வெ.இரா, ஒரு குமுகாயச்
    சீர்திருத்தக்காரர், பகுத்தறிவு வழிகாட்டி. அவர்
    ஒரு பேராசிரியரோ, அரசியல் வல்லுநரோ
    அல்லர். தமிழரின் குமுகாய அமைப்பைச்
    சீர்திருத்தியவர் என்பதற்காகத் தமிழையே
    சீர்த்திருத்தத்தொடங்குவது அவர் அறியாமை
    யாகும்.”
என்றும் பாவலரேறு எழுதிய கருத்துகளில் பெரியார் கருத்து செலுத்தி கவனிக்கவும் செய்தார்.
    எனவே பெரியாரை அவரின் குமுகத் தொண்டுகளை எந்த அளவு பாவலரேறு புகழ்ந்தாரோ, அந்த அளவு அவரின் மொழியியல் பார்வையில் இருந்த சில குறைபாடுகளைக் கடுமையாகவும் திறனாய்ந்திருக்கிறார்.
    எனவே, பாவலரேறு அவர்கள் பெரியாரைப் பற்றி எழுதி யவை, ஏதோ உணர்வு வயப்பட்டு எழுதியவையன்று.
    இந்நிலையில் பாவலரேறு மதித்திருந்த பெரியாரின் தொண்டும், பெரியாரின் கருத்துகளும் தமிழனத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் பயனற்றவை என்றும் அவை தமிழ்த்தேசக் கருத்தையே சிதைப்பன என்றும் சிலர் கருத்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
    அத்தகையோர் அவ்வாறு கருத்துக் கொண்டிருப்பதோடு, பெரியாரை இழிவுபடுத்திப் பேசிடவும் செய்கின்றனர்.
    பெரியார் பிறப்பால் கன்னடர் என்றும், எனவேதான் அவர் தமிழர், தமிழ்நாடு என்று பேசாமல், திராவிடர் - திராவிட நாடு என்று பேசினார் என்றும், அவர் பேசிய வகையில் திராவிடர் என்கிற கருத்துதான் தமிழர்களை எழுச்சி கொள்ள விடாமல் செய்து விட்டது என்றும், எனவே தமிழர்களுக்கு இந்தியம் பகை போலவே திராவிடமும் பகையாக இருக்கிறது என்றும், இந்தியத்தை வீழ்த்த  வேண்டுமானால் முதலில் திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்றும் விரிவாகக் கருத்து கூறுகின்றனர்.
    இவ்வகைக் கருத்துடையோர் முன்வைக்கிற செய்திகள் குறித்து சிலவற்றைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
    முதலில் திராவிடம் என்று ஒரு மொழி இல்லை. திராவிடம் என்கிற மொழியிலிருந்துதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் போன்ற மொழிகள் பிறந்து வந்தவையாகக் கருதுவது பிழையான கருத்து.
    தமிழிலிருந்தே சமசுக்கிருத பிராகிருத மொழிகளின் கலப்புகளால் மற்ற மொழிகள் எல்லாம் படிப்படியாகத் திரிந்து வேறு
வேறு மொழிகளாயின.
    தமிழே தமிழ்நாடு முழுக்க மட்டுமன்று, இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற அன்றைய நாவலந் தீவில் இருந்த பல நாடுகளிலும் பேசப்பட்ட மொழியாக இருந்தது.
    பிராகிருதத்தை வடபால் தமிழிய மொழி என்று மொழியியல் அறிஞர் பாவாணர் குறிப்பிடுவார்.
    பிராகிருதம்  என்கிற மொழியே அசோகர் காலங்களில் எல்லாம் வட நாடுகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிறது. அசோகர் காலங்களில்  சமசுக்கிருதம் இல்லை. அசோகர் ஆண்ட காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் பிராகிருதத்தி லும்,  பாலியிலிலுமே உள்ளன. அசோகரின் காலம் கி.மு. 360 அளவிலானது.
    வடநாடுகளில் கி.பி. 150 ஆம் ஆண்டிற்கு முன்பாகச் சமசுக்கிருதம் எழுத்தளவில் இருந்ததற்கான பதிவுகள் இல்லை.
இவை ஒருபுறம் இருக்க, பழைய நாவலந்தீவுக்குரிய நாடுகளில் பேசப்பட்ட தமிழ் படிப்படியாக சமசுக்கிருதம் உள்ளிட்ட ஆண்டை மொழிகளின் கலப்பால் வெவ்வேறு மொழிகளாகத் திரிந்தன.
    எனவே மூல மொழியான தமிழ் தென் பகுதியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிறபடி இருந்தது.
    பாண்டிய, சோழ, சேரப் பேரரசுகளின் காலங்களுக்குப் பிறகு களப்பாளர்கள், பல்லவர்கள், கன்னட, தெலுங்கு நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், ஆங்கிலயர்கள் எனத் தொடர்ச் சியாகப் பலரின் படையயடுப்புகளால், ஆட்சிகளால் தமிழ் ஆட்சி மொழி நிலையை இழந்தது. இருப்பினும் வெகு மக்கள் மொழி யாகவே நீடித்தது. பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழைக்காத்தன.
    தமிழ் மொழியைப் பிற மொழியினர் தங்கள் மொழிப் பலுக்கலுக்கு   ( உச்சரிப்புக்கு ) ஏற்பவே சுட்டினர்.
    ஆங்கிலேயர் எப்படி டாமில் (வீழிதுஷ்யி) ‡ என்கின்றனரோ, பிரெஞ்சுக்காரர்கள் எப்படி டமுல் என்று நம் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றனரோ
    அப்படியே களப்பாளர்கள் (களப்பிரர்கள்) நம்முடைய தமிழ் மொழியை  ‘த்ரமிள்’என்றே குறிப்பிடலாயினர்.
    அவர்களின் வாய்மொழிக்கு அவ்வாறே அவர்களால் பலுக்க (உச்சரிக்க) முடிந்தது.
    அவ்வகையிலேயே கி.பி.460களில் அவர்கள் அமைத்த ‘சங்கத்’திற்குத் ‘த்ரமிள சங்கம்’என்று பெயரிட்டனர்.

    ஆக, தமிழே - த்ரமிள - த்ரமிட - திராவிட என்றவாறு பிராகிருத, சமசுக்கிருத மொழியாளர்களால் குறிப்பிடப்பட்டது.
    ஆக - திராவிடர் - என அவர்கள் தமிழரையே குறிப்பிட்டனர்.
    அவ்வகையில் ஆரியரல்லாத, ஆரியப் பார்ப்பனியரல் லாதவர்கள் ‘திராவிடர்கள்’ என்பதாக அவர்களால் அறியப் பெற்றனர்; அவர்களின் இலக்கியங்களில் பதிவு செய்தனர்.   
    ஆனால் ‘கால்டுவெல்’ எனும் ஐரோப்பிய மொழியியல் அறிஞர் எழுதிய ‘ஒப்பிலக்கண’ஆய்வு நூலில் தமிழும், தெலுங்கும், கன்னடமும், மலையாளமும்,  துளுவும் ஆரியமல்லாத திராவிட மொழிகள் என ஆய்ந்து எழுதினார். ஆரியக் குடும்ப மொழிகளுக்கு மாறான தனித்தக் குடும்ப மொழிகளாகத் திராவிட மொழிக்குடும்பம் உள்ளதாகக் காட்டினார்.
    இக்காலங்களில் அரசியல் அதிகாரத்தால் ‘பிரித்தானிய இந்தியா’ என்கிற ஓர் அரசதிகாரத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் தங்கள்ஆட்சி வாய்ப்புக்காக மும்பய், கொல்கத்தா, சென்னை-  ஆகிய தலை மாநிலங்களை உருவாக்கினர்.
    ஆங்கிலேயரின்  பிரித்தானிய இந்தியாவில், இந்தி சமசுக் கிருதத்தை, ஆரியப் பார்ப்பனியர் தங்கள் ஆளுமையோடு, உயர்த்திப் பிடித்தனர். அம்மொழிகளின் ஆண்டை வகுப்பினரைத் தம்மோடு இணைத்துக்கொண்டே பாரதம் ‡ இந்தியம் எனும்  கருத்துருவாக் கங்களை நாடாக - அரசாக - பண்பாடாக மக்களினமாக உருக்காட்டி வளர்த்தனர்.
    அவர்களின் அப்போக்கை எதிர்த்து ஆரியத்திற்கு மாற்றாய் அன்றைக்குச் சென்னைத் தலைமாநிலத்தை (மெட்ராசுபிரசிடென் சியை) ஆண்ட ஆண்டை வகுப்பினரின் அடையாளப் படுத்தமே திரா விடர், திராவிடர் நாடு என்னும் அடையாளங்களாக இருந்தன.
    சென்னைத் தலைமாநிலத்திற்குள் (மெட்ராசு பிரசிடென் சிக்குள்) தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என நான்கு மொழிவழி இனத்தினரும் உள்ளடங்கியிருந்தனர். எனவே அவர்கள் ஒரு மொழியினத்திற்குரிய பெயர் அடையாளத்தோடு அடையாளப்படுத்தப்படாமல் ‡ ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரான ‘திராவிடர்’என்றவாறும் அடையாளப்படுத்தப்பட்டனர்.
    அன்றைக்குச் சென்னையே தலைநகராக இருந்ததால், சென்னை - சென்னையைச் சுற்றிய நிலவுடைமையர்கள் பெரும் பாலும் தெலுங்கு ரெட்டியார், நாயக்கர்களாக இருந்ததால் அவர்களைச் சார்ந்தோரே அரசியலில் ஆளுமை செய்தனர்.
    அன்றைய நயன்மைக் கட்சி - பிராமணரல்லாதார் இயக்கமாக அன்றைக்கிருந்த ஆரியப்பார்ப்பனர்களின் அரசியல், கல்வியியல், ஆட்சியியல் ஆளுமைகளை எதிர்த்துத் தொடங்கப்பட்டது. அதன் அடையாளம் பிராமணரல்லாதார் இயக்கம் என்பதோடு இருந்தாலும், அதில் பெரும்பான்மையினர் தெலுங்கு ஆளுமை நிலவுடைமைச் சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்தனர். அவர்களுக்கு மட்டுமன்று - ஐதராபாத் நிசாம் ஆளுமையின் கீழ் உள்ளடங்கித் தெலுங்கானா வரையிலிருந்த தெலுங்கர்கள் -ஆந்திர வணிக நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் தெலுங்கானா எனத் தனித்த ஓர் அரசுரிமை அமைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடேயே இருந்தனர்.
    அதே போல் அன்றைக்குச் சென்னைத் தலை மாநிலத்தில் உள்ளடங்கியிருந்த, கன்னட வாழ்பகுதியினரும் மைசூர் தனி ஆட்சியக (சமசுத்ததான)த்தோடு சேர்ந்து தங்களுக்கான தனி அரசுரிமை அமைக்க வேண்டுமான எண்ணத்தோடேயே இருந்தனர்.
    மலையாளத்தினரும் அப்படியே கொச்சி,  திருவிதாங்கூர் ஆட்சியக (சமசுத்ததான)த் தோடு இணைந்து தங்களுக்கான தனி அரசுரிமையை உருவாக்கும் எண்ணத்தோடேயே இருந்தனர்.
    மொழிவழி மாநிலக் கருத்து வலுப்பட வலுப்பட 1956 ‡இல் நடைபெற்ற மொழி மாநிலப் பகுப்புக்குப் பிறகு அவர்களெல்லாம் தங்கள் தங்கள் மொழி மாநிலத்தினர்களாக அன்றைய சென்னைத் தலை மாநிலத்திலிருந்து பிரிந்து சென்று தங்கள் மொழி மாநிலங்களை அமைத்துக் கொண்டனர். அப்படிப் பிரிந்து சென்று தனி மாநிலங் களை அமைத்திட்டபோது, தமிழர்கள் பெரும் பகுதி வாழ்ந்த நிலப் பரப்புகள் சிலவற்றையும் தங்கள் பகுதிகளோடு இணைத்துக் கொள்ளவும் செய்தனர்.
    1956 வரை இந்த நிலைகள் நீடித்தன.
    அதற்கு முன்னர் நயன்மை (நீதி)க்கட்சி ஆட்சியும், அதன்பின்னர் 1936 தொடங்கிப் பேராய ( காங்கிரசு)க் கட்சி ஆட்சியும் நடைபெற்றது. 1936 இல் இந்தித் திணிப்பு தொடங்கியது. இந்திப் பரப்பல் அவை (பிரச்சார சபா)யைத் தொடங்கி நடத்துவதற்கென்றே காந்தி பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றார்.
    இந்தி மொழியையும் ஆரியப் பண்பாட்டையும் இராசாசி 1938 இல் கட்டாயமாகத் திணித்தார். அதை எதிர்த்துத் தமிழ்க்காப்பு முயற்சியை முன்னெடுத்த மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினர். இந்தித் திணிப்புப்போராட்டம் இந்திய எதிர்ப்புப் போராட்டமாகவும் வளர்ச்சி கொண்டது.
    ஏற்கனவே ஆரியப் பார்ப்பனியத்தை இந்திய ஆளுமைத் தன்மையோடு இணைத்து அடையாளப்படுத்திப் போராடி வந்த பெரியார் தமிழறிஞர்களின் போராட்டங்களோடு இணைந்தார். இந்தியை எதிர்ப்போம் என்றும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் முழக்கமிட்டார்.
    தமிழர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழியளவில் வலுப்பட்டது போன்று இந்தியத்தை எதிர்த்து வலுப்படவில்லை.
    அது ஒருபுறம் எனில் மறுபுறம் ஆரியப் பார்ப்பனியத் திற்குரியதான இந்தியத்திடமிருந்து ஆரியரல்லாத திராவிடர்களுக் குரிய நாட்டைத் தனி நாடாக்கும் சிந்தனையே பெரியாரிடம் தொடக்கத்தில் தோன்றி இருந்தது.   
    1940 இல் திருவாரூரில் நடந்த தென்னந்திய நலவுரிமைக் கழக மாநாட்டின் தீர்மானத்தில்,
     ‘திராவிடர்களுடைய கலை நாகரிகம்
    பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடை
    வதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின்
    தேசமாகிய சென்னை மகாணம் இந்திய
    மந்திரியின் நேர்பார்வையின் கீழ் ஒரு
    தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்.’
    என்று கூறியிருந்தார்.
    தொடர்ந்து 1944 - சேலத்தில் திராவிடர் கழகத்தின் தொடக்க மாநாட்டுத் தீர்மானத்தில் :
    “திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும் நேரே பிரிட்டீசு செகரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி நாடாகப் (றீமிழிமிe) பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கையை முதற் கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.” -  என்றும் கூறியிருந்தார்.
    இந்தத் தீர்மானங்கள் வழி ஒரு தேசத்தில் விடுதலை எத்தகையது எனப்பெரியார் விளங்கிக் கொண்டார் என்ற ஆய்வு ஒருபுறம் இருக்க, அவர் திராவிடர்களின் தேசமாக - நாடாகக் கருதியது அன்றைய சென்னைத் தலை மாநிலத்தையே என்பதைத் தெளிவாக அறியலாம்.
    மேலும் - 1956 இல் மொழி வழி  மாநிலங்கள் பிரிந்து போகிற படியாகத் தெலுங்கு, கன்னட, மலையாள, மாநிலங்கள் பிரிந்து போய்விட்டநிலையில்,பெரியாரின்கருத்துகள் மிக முகமையானவை.
    “கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை ; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.மேலும், சென்னை மாகாணத்தில் 7 இல் ஒரு பாகத்தினராக இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவற்றில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்வதற்    கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கின்றனர். அதனால் இவர்கள் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதி வந்தேன். அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். அதனால் நான் இந்தப்பிரிவினையை வரவேற்கிறேன்.”
    என்றும், “திராவிட நாடு என்பது இனித் தமிழ்நாடு என முழு சுயேச்சை விடுதலைக்குப் பாடுபட வேண்டும்” என்றும்,
    “ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்துபோன பின்பும்கூட மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் தமிழ்நாடு  என்ற பெயர் கூட இருக்கக் கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது.
    இதைத் திருத்தத் தமிழ்நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை கீழ் மேல்சபை உறுப்பினர்களையும், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.
    தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்.”
    - என்றும்  பெரியார் ‘திராவிடர்’ - என்கிற கருத்தை ஆரியப் பார்ப்பனர் அல்லாதவர் என்கிற அடிப்படையிலேயே கொண்டி ருந்தார் என்பதைத் தெளிவுபட உணரலாம்.
    1956க்குப் பின்னர் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று தம் வாழ்நாள் இறுதி வரையிலும் பெரியார் முழங்கவும், ‘விடுதலை’ நாளிதழின் தலைப்பில் அச்சிட்டுப் பரப்பிடவுமே செய்து வந்தார்.
    ‘தமிழ்நாடு தமிழருக்கே! ’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றும், வில்லை (பேட்ச்) அணிந்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.
    அவரின் போராட்டங்கள், போராட்ட நடைமுறைகள் சிலவற்றில் நிறைவின்மை ஒருபுறம் இருக்க, அவரின் தமிழ்நாடு விடுதலை பற்றிய கருத்திலும் ஆரியப் பார்ப்பனரல்லாத திராவிடர் இனம் பற்றிய கருத்திலுமான செய்திகளில் அவரையோ, அவர் கருத்துகளையோ பகையாகக் கருதுவதற்குரிய செய்திகள் இருப்பதாக அறிய முடியவில்லை.
    பெரியாரின் கருத்துகளும், செயல்களும் போதுமானவை என்று சொல்லிவிட இயலாது. எனவே அவற்றைச் செழுமைப் படுத்திட வேண்டும், மேலும் வளர்த்தெடுத்திட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
    ஆனால் பெரியார் கருத்துகளைப் பகைமைக் கருத்துகள் என்றும், நச்சுக் கருத்துகள் என்றும் இழித்துரைப்பதும், எதிர்ப்பதும், ஆரியத்தை, ஆரியப்பார்ப்பனியத்தை வளர்ப்பதே ஆகும்.

    தமிழ்நாடு விடுதலை என்பது இந்தியத்தை, வல்லரசியத்தை எதிர்த்துப் போராடுவதன் வழி அவற்றின் அதிகாரங்களை வீழ்த்துவதன் வழி மட்டுமே வெல்லப்படக்கூடியது.
    அவ்விடுதலைப் போராட்டத்திற்குரிய போராட்டத் தலைமை ஆற்றல்கள், உழவர்கள், தொழிலாளர்கள், ஒருங்கிணைந்த உழைக்கும் மக்களே ஆவர். அவர்களுக்கு ஆதரவாய், மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தட்டு வகுப்பினர், பெண்கள், வணிகர்கள், சிறு முதலாளிகள் எனப் பலதரப்பினரும் இருந்திட  வேண்டியிருக்கிறது.
    தமிழ்த்தேச விடுதலை அரசியலை ஏற்றுக் கொள்ளுகிற ஆதரவுக்குரிய ஆற்றிலினராய் குறிப்பிடத்தக்க நிலையில் முன்னணியினராய் இருப்பவர்கள் அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கத் தோழர்களும் ஆவர். அவர்கள் அம்பேத்கர் மீதும், பெரியார் மீதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள்.
    அவர்களிடம் போய் பெரியார் பிறப்பால் கன்னடர், எனவேதான் திராவிடம் பேசினார் என்றும், தமிழன் என்று பேசவில்லை என்றும், தமிழ்நாட்டின் நிலங்களைத் தெலுங்கர்களும், கன்னடர்களும் சுரண்டிப்பறித்துக் கொள்ள வழிவகுத்திட்டார் என்றும், தமிழை இழிவுபடுத்தினார் என்றும் 1965 இன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், இன்னும் பலப்படியாகவும் இழித்தும் பழித்தும் உரைப்பது தமிழக வரலாற்றையும் பெரியாரையும் முறைப்படி நிரல்படுத்தி அறியாத அறியாமைப் போக்கு என்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.

   
அத்தகையவர்கள் தமிழக விடுதலை அரசியலைப் பொறுப்புடன் உணர்ந்து அதற்குரிய எதிரிகளான இந்தியத்தையும், வல்லரசியத்தையும் தனிமைப்படுத்தி எதிர்த்து வீழ்த்திடும் அரசியல் தெளிவு கொண்டியங்காமல், நண்பர்களாக அணிதிரட்டப்பட வேண்டியவர்களையே பகைவர்களாக்கி எதிர்க்கும் தெளிவற்ற நடைமுறை உள்ளவர்களாக இருக்கின்றனர்.
    அத்தகைய தெளிவற்ற நிலையிலிருந்து அவர்கள் மாறி,
    “அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்”
    என்று திருவள்ளுவப் பேராசான் சொல்லுகிற வகையில் பகைவனும் உள் நுழைந்து அழிக்க இயலாத வகையில் அறிவு துன்பங்களை நீக்கும் கருவியாகச் செயல்படும்  என்பது போல்,
    தமிழ்த்தேச எதிரிகளையும், நண்பர்களையும் சரியாகத் திறம்பட வகைப்படுத்தி நிறுத்திப் போராடுகிற அறிவு ஆற்றலைத் தமிழ்தேச இயக்கத்தினர் பெற வேண்டும்
.
   
அத்தகைய கருத்தோட்டத்திலேயே பாவலரேறு ஐயா அவர்கள் தமிழ்த்தேச முதன்மை எதிரிகளாக இந்தியத்தையும், வல்லரசியத்தையும் கணித்ததும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் இயங்கிய பெரியார் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும், கருத்துகளையும் வகைப்படுத்தி, நட்பாற்றல்களாக நெறிப்படுத்தி இயக்கினார். அவ்வகையில் பெரியாரைப் பற்றிய  பாவலரேறு அவர்களின் கருத்தோட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய அவரின்  ‘பெரியார்’ நூலைப் படித்திடவும், பகுத்தறிந்திடவும், பயனாக்கிக் கொள்ளவும் வேண்டும்.

நூல்: ‘பெரியார்’
நூலாசிரியர் : பாவலரேறு பெருந்சித்திரனார்
வெளியீடு: மன்பதை பதிப்பகம்,
பாவலரேறு கணினியகம் வேளச்சேரி முதன்மைச் சாலை, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை - 600100  விலை : உருவா 50/-
நன்றி: உழைக்கும் மக்கள் தமிழகம் 

Sunday, October 25, 2015

டெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது

முகநூல்
தோழி சுலேகா
டெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அதை மீடியா பரப்பரப்பாக பேசியது..
தோழி. அருந்ததி ராய் அவர்களின் விமர்சனம் இந்த நாட்டு இறையான்மை மீது...
பார்ப்பன பெண்களுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்க கூடாது..

 
 

ஆசிரமம் வரும் பக்தர்களின் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த காமச்சாமியார் ஆஸ்ராம் பாபு!

முகநூல்: தோழி சுலேகா  
ஆசிரமம் வரும் பக்தர்களின் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்து தன்னை கடவுளாக அறிவித்து ‘அருள்’ பாலித்தவர் காமச் சாமியார் ஆஸ்ராம் பாபு! இந்த ‘தவ’த்திற்காக கடந்த ஒரு வருடம் ஜோத்பூர் சிறையில் இருப்பவர்.
தனது சீமந்த புத்திரனையும் அதே – வன்புணர்ச்சி– புண்ணிய செயலுக்காக சிறை மீட்டியிருக்கிறார்.
மாடி வீட்டு மார்வாடி முதல் பா.ஜ.க கட்சி மோடி வரை உள்ள பக்தர்களின் பலம்தான் பலான கழிசடை காரியங்கள் செய்வதற்கான உந்து சக்தி.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் கொடுத்து வழக்கு நடைபெற்றாலும், நேரடி சாட்சியங்கள் பலர் கூண்டிலேறி உண்மை சொன்னாலும் சாட்சிகள் சிலரை பரலோகமே அனுப்பி விட்டார்கள்.
இப்பேற்பட்ட மகான் சிறையில் இருக்கும் மாநிலமான ராஜஸ்தானை பா.ஜ.க சீரும் சிறப்புமாக ஆள்கிறது.
இந்நிலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் பாட நூலில் நாட்டின் சாமியார்கள் வரிசையில் (சீக்கிய குரு நானக், விவேகானந்தர், அன்னை தெரசா, ராமகிருஷ்ண பரமஹம்சர்) ஆகியோர் வரிசையில் ஆஸ்ராம் பாபுவும் ஜம்மென்ற் அமர்ந்திருக்கிறார்.
சிறுவர்கள் மீதான பாலியல் முறைக்கேடுகளை இந்த நாடே அங்கீகரித்துவிட்டது என்பதை தவிர வேற என்ன சொல்ல முடியும் ?
இனி குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன் போன்ற பூஜைக்குரிய மாந்தர்களின் கதைகளை போட்டு படிக்க சொல்ல வேண்டியதுதான்.
உலகத்திலேயே இது போன்ற நாடு எங்கேயும் இருக்காது...

Sunday, October 4, 2015

வலைப்பதிவர் சந்திப்பு 2015 புதுக்கோட்டையில்... வருக! வருக!

நாளைவிடியும்தொடர்புக்கு... நா.முத்துநிலவன்  94431 93293

http://bloggersmeet2015.blogspot.com/2015/10/2015.html

http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_7.html“பதிவர் திருவிழா-2015” அழைப்பிதழ்! வருக! வருக! முதலில் ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கிய தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு, சென்னையில் இரண்டுமுறை (2012,2013) நடந்தபின்னரே உலகறியத் தொடங்கியது. நான் 2013இல் சென்னையில் கலந்து கொண்டு வந்தேன்... 
புதுக்கோட்டையில் எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வழிகாட்டுதலில் “கணினித் தமிழ்ச்சங்கம்“ உருவானது. அதன் வழியே தமிழாசிரியர் நண்பர்களின் ஒத்துழைப்போடு,  இருமுறை “வலைப் பதிவர்களுக்கான இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” நடத்தினோம். அதில் சுமார் 50பேர் “வலை“யில் சிக்கினார்கள்! இது ஓர் இன்ப வலையானது!
மதுரையில் கடந்த ஆண்டு நடந்தபோது, ரூ.2,000 நன்கொடை தந்ததோடு, புதுக்கோட்டையிலிருந்து சுமார் 25பேர் சென்று கலந்துகொண்டு வந்தோம்.

 இப்போது புதுக்கோட்டையிலேயே...
சென்னையில், “புலவர்குரல்“அய்யா இராமாநுசம் அவர்கள் தலைமையில் நண்பர்கள் மதுமதி, தி.ந.முரளி, சென்னைப்பித்தன், கவியாழி உள்ளிட்ட பலப்பல நண்பர்களின் ஒத்துழைப்பிலும் சிறப்பாக நடந்தேறியது...
மதுரையில், அய்யா சீனா அவர்களின் தலைமையில் ரமணி, தமிழ்வாசி உள்ளிட்ட பல நண்பர்களின் உழைப்பிலும் சிறப்பாக நடந்த விழா இப்போது புதுக்கோட்டையில் “கணினித் தமிழ்சங்க“ நண்பர்களின் கூட்டு உழைப்பில் தயாராகி வருகிறது... ஒரு பெரும் பட்டாளமே உழைத்துக்கொண்டுள்ளது!
இதோ அழைப்பிதழ்!
உலகறிந்த தமிழ் எழுத்தாளர், இன்றும் சலிக்காமல் லட்சக்கணக்கான வாசகர் திரளோடு அடிக்கடி வலைப்பக்கத்திலும் எழுதி வருகிற எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள் வருகிறார்கள்!
உலகம் முழுவதும் தேடுபொறியில் கோடிக்கணக்கானோர் தினமும் தேடும் கட்டற்ற தகவல் களஞ்சியமான “விக்கிமீடியா“வின் இந்தியத் திட்ட இயக்குநர் திருமிகு அ.இரவிசங்கர் அவர்கள் வருகிறார்கள்...(இவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை என்பதும் குறிப்பிடத் தக்கது)
புதுக்கோட்டையில் பயின்று, பலகாலம் பணியாற்றி, தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குப் பெருமை சேர்த்து வரும் முனைவர் சொ.சுப்பையா அவர்கள் வருகிறார்கள்...
முதன்முறையாக, தமிழ்ப் பதிவர்களோடு இணைந்து, ரூ.50,000 ரொக்கப் பரிசும் அறிவித்து மகிழ்வித்திருக்கும் தமிழ்இணையக் கல்விக கழகத்தின் இணைஇயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் வருகிறார்கள்...
எங்களையெல்லாம் “வலை“யில் வீழ்த்தி, தமிழ் இணையப் பயிற்சிக்கும் தூண்டி, கல்வி-இலக்கியம்-தொழில்நுட்பம்-தலைமைப் பண்பு-மனிதப்பண்பு எனப் பலப்பல துறைகளில் எங்களுக்குத் தன் செயல்களால் பயிற்சி தந்தவர், தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும், இதயத்தால் எங்களுடனே எப்போதும் இருக்கும் எங்களய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வருகிறார்கள்...
இவர்களொடு, த.இ.க. தொடர்பு நமக்குக் கிடைக்கக் காரணமான இளைஞர், கணினித்துறையில் ஆற்றலும் அனுபவமும் தொடர்ஆர்வமும் கொண்ட நம் நண்பர் நீச்சல்காரன் அவர்கள் வருகிறார்கள்..
காலை 8.30 மணிக்கு – கவிதை-ஓவியக் காட்சி திறப்புடன் தொடங்கி, மாலையில் இன்ப அதிர்ச்சியாக வரப்போகும் சில முக்கியமான நண்பர்களின் வரவு வரை தொடர் நிகழ்ச்சிகள்...5மணிக்கு விழா நிறைவடையும்.
பதிவர் அறிமுகம்- தமிழிசைப்பாடல்கள்- புத்தக வெளியீடுகள்- பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை- சிறப்புரைகள்- போட்டிகளில் வெற்றி பெற்ற பதிவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றுகளும் வழங்கல்- தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியீடு-என நிகழ்ச்சிகள் 5மணிவரை தொய்வின்றித் தொடரும்..!
இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் சுமார் 350பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு நிகழ்வு-பணிகளுக்கும் ஒரு குழுவென 20குழுவைச் சேர்ந்த சுமார் 50பேர் இதற்கெனக் கடந்த ஒருமாதமாக உழைத்து வருகிறார்கள்..
தாங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழ்வலைப்பதிவர் பயனுறவும் அதன்வழியே கணினித் தமிழ் வளரவும், முகம்தெரியாத முகநூலில் சிக்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர் வலைப்பக்கம் திரும்பவும் உதவ வேண்டும்!

வாசலில் நின்று வரவேற்கக் காத்திருக்கிறோம்.. வருக!
இணையத் தமிழால் இணைவோம்... வருக! வருக!!
தங்கள் வருகை எங்கள் உவகை!... வருக! வருக!! வருக!!!


விழாக்குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்....!

அன்பில் மகிழ்ந்து, ஆதரவால் நெகிழ்ந்து-
கூப்பிய கைகளுடன் தங்ளுக்காகக் காத்திருக்கிறோம்!
இவண்,
நா.முத்துநிலவன்,
(ஒருங்கிணைப்பாளர்) 
தங்கம்மூர்த்தி, இரா.ஜெயலட்சுமி, மு.கீதா, ச.கஸ்தூரிரெங்கன், பொன.கருப்பையா, கு.ம.திருப்பதி, க.குருநாதசுந்தரம், வைகறை, மீரா.செல்வக் குமார், ராசி.பன்னீர்செல்வன், பா.ஸ்ரீமலையப்பன், மகா.சுந்தர், ஆர்.நீலா, அ.பாண்டியன், மைதிலி, கா.மாலதி, த.ரேவதி, ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன், சு.இளங்கோ, எஸ.ஏ.கருப்பையா, தூயன், யு.கே.கார்த்தி, நாக.பாலாஜி, சு.துரைக்குமரன், நண்பா.கார்த்திக்,
சோலச்சி, சுரேஷ்மான்யா, சிவா.மேகலைவன்
விழாக்குழு உறுப்பினர்கள்
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
செல்பேசி – 94431 93293
--------------------------------------------------
இவர்களுடன்  இணைந்து
திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்கள்
விழாவுக்கு ஆற்றியிருக்கும்
தொழில்நுட்ப உதவி சொல்லில் அடங்காது.

வலைப்பக்கத்தை
மெருகூட்டித் தந்த
சென்னைப் பதிவர்
திருமிகு மதுமதி அவர்கள்
விழாக்குழுவின் நன்றிக்குரியவர்
இவர்களை,
அனைத்துப் பதிவர்களும் சேர்ந்து
நமது விழாவில்
கௌரவிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
--------------------
விழாவுக்கான வலைப்பக்கம் –  http://bloggersmeet2015.blogspot.com
விழாத் தொடர்பான மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com
பி.கு. - விழாவில், அதுவரை முகமறியாத நட்புக் கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்களை ஓரிடத்தில் சந்திப்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி?
-----------------------------------------------------------------
நண்பர்களுக்கு
ஓர் அன்பான வேண்டுகோள்!
இதைப் படிக்கும்
நமது வலைநண்பர்கள்
இந்த நிகழ்வை,
தம்வீட்டு நிகழ்வாக எண்ணி,
இந்த அழைப்பிதழை
தமது வலைப்பக்கத்தில்
அன்போடு  பகிர்ந்து
அனைவரையும் அழைக்க வேண்டுகிறோம்.
www.naalaividiyum.blogspot.in

Sunday, February 23, 2014

அமெரிக்காவின் தரகர்கள் யார்? - மணக்காடு செயச்சந்திரன்

அமெரிக்காவின் தரகர்கள்யார்?
                     - மணக்காடு செயச்சந்திரன்

(நாளைவிடியும்   சூலை - திசம்பர் 2013 இதழில் இடம்பெற்ற கட்டுரை)

கூடங்குளம் அணு உலை ஆபத்தானவையா? எதிர்ப்பின் பின்னணியில் அன்னிய சக்திகளா? உண்மை நிலை என்ன?
    கூடங்குளம் மட்டுமல்ல பொதுவாக அணுஉலை என்பதே ஆபத்தானவைகள்தான். இதை அறிந்துகொள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்தில் படித்தவராகவோ அணுவிஞ்ஞானியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.  சாதாரண அறிவே போதும். இரசியாவில் செர்னோபிலில் நடந்த அணு உலை விபத்துகளும் போபாலில் ஏற்பட்ட விசவாயுக் கசிவும் அதன் விளைவாக மனித இனம் கண்ட அழிவுகளும்,  இன்னும் ஆறாத வடுக்களாய்த் தொடரும் கொடிய நோய்களும் நம் கண்முன்னே காட்சிகளாக நிற்கும் சாட்சிகள்.  அணு உலை விபத்து ஏற்பட்டுத்தான் பாதிப்பு ஏற்பட வேண்டுமென்று அவசியமில்லை. அணு உலைக் கூடத்திலிருந்து தினசரி வெளியாகும் அணுக்கதிர் வீச்சுகளே மனித இனத்தைக்  கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லவும் கொடிய நோய்களைப் பரப்பவும் போதுமான விசயமாகும். இது குறித்த சமூக ஆர்வலர்கள் பலர் மிக விரிவாகவும் தெளிவாகவும் கட்டுரைகளை  எழுதியிருக்கிறார்கள்.
எதிர்ப்பின் பின்னணியில் அன்னிய சக்திகள்
     இந்த உதயகுமார் யார்? போராட்டக்காரர்கள் 25 ஆண்டுகாலம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நாட்டின் வளர்ச்சிக்குத்  தடையாக இருப்பவர்கள் என்று ஆளும் முதலாளித்துவ ஏகாதிபத்திய எதேச்சதிகார காங்கிரசு தலைமையிலான அரசும் அவர்களின் ஏவல்களும் காவிப்படைகளும் நாளேடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் நாளும் ஒரு செய்தியைப்  பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றார்கள் ‡உண்மை நிலை என்ன?
 யார் இந்த காங்கிரசு?
    1950 களில் அண்ணா காங்கிரசுக்கு எதிராக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தபோது அதைப்  பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரசு அவரை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரைப்பார்த்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவாளி என்று சொன்னவர்கள் தான் இந்த காங்கிரசுக்காரர்கள். அவர்களுக்கு வெண்சாமரம் வீசினால்  அவர்கள் தியாகிகள் ; அவர்களை எதிர்த்து மக்களிடம் உண்மையை எடுத்துச் சொன்னால் அவர்கள் அமெரிக்க உளவாளிகளா? போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விசவாயுக் கசிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டபோது அந்த  நிறுவனத்தின் தலைவரான அமெரிக்க ஆண்டர்சனை கைது செய்யாமல் அமெரிக்கா கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தவர்கள்தான் இந்த                                                                                                  
காங்கிரசு வீராதி வீரர்கள். இவர்கள் சொல்கிறார்கள் உதயகுமாரையும் போராட்டக்காரர்களையும் பார்த்து அமெரிக்காவிலிருந்து டாலர் வருகிறது. அய்ரோப்பாவிலிருந்து யூரோ வருகிறது என்று. ஏன் ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனைகளைத்  தன்கையில் வைத்திருக்கும் இவர்களால் அமெரிக்காவிலிருந்து வரும் அந்தப் பணத்தைத் தடுத்து  நிறுத்த முடியாதா? போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவிலிருந்து  பணம் வருகிறது என்றால் அணு உலையை ஆதரிப்பவர்களுக்கு இரசியாவிலிருந்து பணம் வருகிறதா?
யார் அமெரிக்காவின் கைத்தடி?
    அமெரிக்க - இந்திய அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இரண்டு மாத காலம் இந்தியப் பாராளுமன்றத்தைப் போர்க்களமாக மாற்றியது யார்? இந்தக் காங்கிரசுக்காரர்களா? உதயகுமாரா? இடது சாரிகளின் எதிர்ப்பையும் மீறி ஆட்சியைப் பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்று அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்டது யார்? இந்தக் காங்கிரசுக்காரர்களா? உதயகுமாரா? அமெரிக்கவுடன்  ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு காங்கிரசுக்குக்  கொடுத்து வந்த ஆதரவை இடது சாரிகள் விலக்கிக்கொண்டபோது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வ தற்காக மற்றகட்சி எம்.பிக்களை விலைக்கு வாங்குவதற்கு அமெரிக்க டாலர்களை லஞ்சமாக கோடிகோடியாக கொட்டியது யார்? இந்தக் காங்கிரசுக்காரர்களா உதயகுமாரா? கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவரை விலை கொடுத்து வாங்கி, தோற்றதாக அறிவித்து தோற்றுப்போன சிவகங்கைச் சீமான் சிதம்பரத்தை வெற்றி பெற்றதாக அறிவித்ததோடு மந்திரி பதவியும் கொடுத்தது யார்?  இது ஒன்று போதாதா?  இந்தக் காங்கிரசுக்காரர்கள் எப்படிப்பட்ட பொய்யர்கள்; பித்தலாட்டக்காரர்கள்; சூழ்ச்சிக்காரர்கள் என்று தெரிந்து கொள்க.
     விபத்து நடப்பது இயல்புதானே. அதற்காக விமானத்தில்  பயணிக்காமல் இருக்க முடியுமா? இரயிலில் பேருந்தில் பயணிக்காமல் இருக்க முடியுமா? என்று நாராயணசாமி கேட்கிறாரே? நான் கேட்கிறேன் அந்த நாராயணசாமியைப் பார்த்து.... விமானத்தில் எஞ்சின் கோளாறு.. பறக்கும் போது நடுவானில் எஞ்சின் தீ பிடித்து எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம்.. ஆனாலும் ஏறுபவர்கள் ஏறிக் கொள்ளுங்கள் என்றால் விபத்து நடப்பது இயல்புதானே என்று இந்த நாராயணசாமி ஏறுவாரா?
    வளர்ச்சிக்குத் தடையாக  இருக்கும் உதயகுமாரையும் போராட்டக்காரர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்               களே; யார் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்கள்? டாட்டாக்களும், பிர்லாக்களும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானவரி செலுத்த வேண்டியிருக்கிறதே; அந்தப் பணமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டிய பணம்தானே? அவர்களிடம் இவர்கள் கறாராக வசூலிக்க முடியுமா? அவர்கள் மீது வரி ஏய்ப்பு வழக்குப் போடமுயுமா?
வளர்ச்சி வளர்ச்சி என்று இரத்தக் கண்ணீர் வடிக்கும் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டம் தீட்டப்பட்டு பல கோடி ரூபாய் கடலில் கொட்டிசெலவழித்த பிறகு அங்கு இராமன் பாலம் இருக்கிறது;  சேது வாய்க்கால் தோண்டப்பட்டால்  அந்த ராமன் பாலம் உடைந்து விடும்  என்று இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி கற்பனைப் புராணக் கட்டுக் கதைகளை ஆதாரமாகக்  காட்டி அந்தத்   திட்டத்தை முடக்கிப்போட்டார்களே! அதற்குச் செலவுசெய்த பணம் வீண் இல்லையா? வளர்ச்சி வளர்ச்சி என்று வாய்க்கிழியப் பேசும் இவர்கள் அப்போது ஊமையாய்ப்  போனது  ஏன்? வளர்ச்சியை முடக்கு பவர் களைக் கைதுசெய்ய வேண்டுமென்று சொல்லத் திராணி யில்லாமல் போனது ஏன்? யார் வளர்ச்சி பற்றிப் பேசுவது? ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசின்  உணவுக்கிடங்குகளில்  பாதுகாக்க முடியாமல் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபோது எங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதி மன்றங்களுக்கு இல்லை என்று கூறி, எலியும் பெருச்சாலியும் உண்டு கொழுத்து  வீணாகப் போனாலும் பரவாயில்லை; நீதி மன்றங்கள் உத்தரவிட்டாலும் அதை பட்டினியில் கிடக்கும் ஏழைகளுக்குக்  கொடுக்க மாட்டோம் என்று சொன்னவர்கள்தான் இந்த வளர்ச்சி வீரர்கள்.
    இவர்கள் நியமித்துள்ள திட்டக் கமிசன் எந்த அடிப்படையில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ் உள்ளவர்களை அடையாளப்படுத்தியுள்ளது தெரியுமா? கிராமப்புறங்களில் தனிநபர்  வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.11 எனவும், நகர்ப் புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.20 க்குக்  கீழும் வருமானம் பெறுபவர்கள்தான் வறுமைக்கோட்டுக்குக்   கீழ் உள்ளவர்களாம்.                                      இன்றைய   விலைவாசியில் 11 ரூபாயும் 20 ரூபாயும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அரசு டாசுமாக்கில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு இலாபம் ஈட்டுகிறது? என்பதை வைத்துக்கொண்டு வளர்ச்சி குறித்து  தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்தான் இந்தப் புள்ளிவிவரப் புலிகள்.
    உதயகுமார் யார்? நம்மைப்  போன்ற சாதாரணமானவர். போராட்டத்தை ஒருங்கிணைத்து தலைமையேற்று நடத்திக்கொண் டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்த ஆட்சி அதிகாரமோ இல்லாதவர்.
அவர் மீது அமெரிக்க பணப்பரிவர்த்தனைக்  குற்றச்சாட்டு மட்டுமல்ல, எந்தக்  குற்றச்சாட்டையும் சுமத்தலாம். அதில் உண்மை  இருப்பதாகவும், ஆதாரம் இருப்பதாகவும் நிரூபிக்கலாம்.  ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள். நாம் அடிமட்டத்தில் இருப்பவர்கள். போராடுபவர்கள்மீது முதலில் மறைமுக அடக்கு முறையைக்  கையாள்வது, திமிரி எழுந்தால் அவன்மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி சமுதாயத்தின் பார்வையில் குற்றவாளியாகக் காட்டி அவர் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி அதன் காரணமாக மக்களிட மிருந்து, தனிமைப்படுத்தி போராட்டத்தை நீர்த்துப்போகச்  செய்யும் முதலாளித்துவச் சூழ்ச்சிதான் இது.
    எப்போது ஒருவன் இந்த சமுதாயத்துக்காகத்  தன்னை முழு மையாக அர்ப்பணித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டானோ அப்போதே அவன் மீதுதேசத்துரோகி, ஊரைக்கெடுப்பவன், கலகம் விளைவிப்பவன், பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி, அதை உண்மை என இந்த மக்களை நம்பவைத்து அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுவார்கள். அதில்தான் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியக் கூட்டணிகளின் வெற்றியே அடங்கியிருக்கிறது.
    கூடங்குளத்தில் அணு உலைத்திட்டம் துவங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. 25 ஆண்டுகாலம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந் தார்கள்?  இந்தப் போராட்டக்காரர்கள் எங்கே போனார்கள்?  என்று  கேட்கிறார்களே! 25 ஆண்டுகாலமாக போராட்டமே நடக்கவில்லையா? 25 ஆண்டுகாலம்  போராட்டம் நடக்கவில்லை என்று சொன்னால் அதன் கட்டுமானப் பணிகள் முடிவதற்கு 25 ஆண்டுகாலம் ஆனதா? இதிலிருந்தே தெரியவில்லையா, 25 ஆண்டு காலமாகத்  தொடர்  போராட்டங்கள் நடந்ததால்தான் அணுஉலை அமைப்பதில் இத்தனை ஆண்டுகாலம் தள்ளிப்போனது என்று.
    1986 இல் பாராளுமன்றத்தில் கூடங்குளத்தில் அணுஉலை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு.
    எதிர்ப்பின் காரணமாக அடிக்கல் நாட்டு விழா மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.
    அணு உலைக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக்கற்கள் போராட்டக்காரர்களால் பிடுங்கி எறியப்பட்டன.
    1986 இல் தினமணியில் அணு உலை பாதிப்பு குறித்து டி.என்.கோபாலனின் விரிவான கட்டுரை வெளிவந்தது.
    1987 திருச்செந்தூரில் மீனவ கிராமங்களின் தலைவர்களின் கண்டனக்கூட்டம்.
    1987 செப்டம்பர் 22 கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
    1988 அணு உலையை எதிர்த்து நெல்லையில் ஊர்வலம்.
    1989 நாகர்கோயிலில் ஊர்வலம்.
    1989 மார்சு 20 தூத்துக்குடியில் ஊர்வலம்.
    1989 சூனியர் விகடனில் அணு உலை ஆபத்து குறித்து நாகார்ச்சுனனின் கட்டுரை.
    1988 பாராளுமன்றத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கண்டன உரை.
    இதே ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த சோவியத் அதிபர் கோர்ப்பச்சேவுக்கு டெல்லியிலும் மும்பையிலும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்ட முயற்சி.
    1989 மே 1 ல் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமாசு கோச்சேரி யின் தலைமையில் கன்னியாகுமரியில் மாபெரும் கண்டனப் பேரணி; காவல்துறையின் துப்பாக்கிச்சூடு. அதே ஆண்டு போராட்டம் பற்றிய ஆவணப்படம் வெளியிடல்.
    1989 சூன் 13 வரை  குமாரதாசு தலைமையில் நெல்லையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அணு உலை ஆபத்துக் குறித்து வீதி நாடகங்கள்.
    1989 சூன் 13 இல் கூடங்குளத்தில் கண்டனப் பொதுக்கூட்டம்.
    இதையல்லாமல் 1989 ல் நாகர்கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 101 தொடர் பொதுக்கூட்டங்கள்.
    தினமணியில் “கொல்லவரும் கூடங்குளம் ”என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள். அதன்  அடிப்படையில் இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த இத்திட்டத்தை ஒருபோதும்   ஒப்புக்கொள்ள முடியாது என்று, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அறிவித்தார் .
    இது முழுமையான  தகவல் அல்ல;  இப்படி கூடங்குளத்தில்  அணு உலை  துவங்கப்பட்ட  காலத்திலிருந்து  இன்றுவரை தொடர் போராட்டங்கள்   நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டு திரைபோட்டு மறைக்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுவதால் தவிர்க்க முடியாமல் செய்தி வெளியிடுகிறார்கள் .  கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை;  உதயகுமாரோ மற்றவர்களோ சொல்வதில் எந்த உண்மையும் இல்லை;  இதனால்  நமக்குத் தடையில்லா  மின்சாரம் கிடைக்கும்;   தொழிற்சாலைகள்  பெருகும்;  வேலைவாய்ப்புகள் பெருகும்; நம்முடைய பொருளாதாரம் உயரும் என்று நினைத்தால், உதயகுமார் கூப்பிடுகிறார் என்பதற்காகவோ வேலை செய்யாமல் பிரியாணி பொட்டலமும் காசும் கொடுக்கிறார்கள (குற்றச்சாட்டு)                                                                                                                                                       என்பதற்காகவோ அந்த மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்களா? காசு கொடுத்து ஆட்களைத் திரட்டுவது ஓட்டுப் பொறுக்கும் காங்கிரசு போன்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்குப்  பொருந்தாது.
    இன்றைக்கு மின்சாரம் என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசியமான ஒன்றுதான்.  தடையில்லா மின்சாரம் கேட்கலாம் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் கூடங்குளம் தான் வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. தடை யில்லா மின்சாரம் கேட்பவர்கள் நெய்வேலியில் உற்பத்தியாகிற ஒட்டு மொத்த மின்சாரமும் இங்குள்ள குடிமக்களின் பயன்பாட்டுக்கும் விவசாயத் துக்கும் சிறு குறு தொழிற்சாலைகளுக்கும் இங்குள்ள வர்த்தக நிறுவனங் களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் பயன்படுத்தியதுபோக எஞ்சியி ருந்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அண்டை மாநிலங் களுக்கும் வழங்குங்கள் என்று முழங்குங்கள். அதை விடுத்து கூடங்குளம் தான் வேண்டும் என்பவர்கள் கூடங்குளத்தில் குடியிருக்கத் தயாரா? அங்கே தனது மனைவி மக்களையும் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தத் தயாரா?
    25 ஆண்டு காலமாக நடக்கும் ஒரு மக்கள் போராட்டத்தை அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நசுக்க நினைப்பதும் அந்த மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக அடாவடித்தனமாக ஆணவப் போக் குடன், அந்த மக்களைப்பற்றிக்  கொஞ்சமும் கவçயில்லாமல் அங்கே அணுஉலை அமைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால், இதை ஒரு காட்டுத்தர்பார் எனச் சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
    இந்தத்  தெற்காசியப் பிராந்தியத்திலே அமெரிக்காவுக்காகத் தரகு வேலை செய்ய மன்மோகன்சிங் காங்கிரசு தளபதியார்களைவிட வேறு எவராவது இருக்க முடியுமா?


நாளைவிடியும்   சூலை - திசம்பர் 2013 இதழில் இடம்பெற்ற கட்டுரை

Thursday, November 21, 2013

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013. naalaividiyum@gmail.com

இதழாளர்கள், வலைப்பதிவர்கள் இச்செய்தியினை வெளியிட்டு உதவுங்கள்!

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.

2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!

4. கடைசி நாள் : 31.12.2013.

5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி,
                         மின்னஞ்சல் (e-mail),             
                         அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)

பரிசுகள்   நூல்களாக  மட்டுமே  வழங்கப்படும்

அனுப்பவேண்டிய முகவரி:

நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
 மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) - 620013.
மின்னஞ்சல்
: naalaividiyum@gmail.com
   
   

Monday, March 21, 2011

பெண்கள் தினம்!

பெண்ணே!

நீ அழகி என்றால்
வெட்கி நின்றாய்!
நீ அன்பு என்றால்
உருகி நின்றாய்!
நீ கருணை என்றால்
இறங்கி நின்றாய்!

இன்னும் இப்படிப்பல!

அடுத்தவர் சொல்கேட்டு
அதுவாகவே மாறி
அடுத்தது என்னவென்று
அகப்படாமல் போனதால்தான்
பெண்ணே நீ

அன்றுமுதல் இன்றுவரை
அடிமைப்பட்டே கிடக்கிறாய்!
சுயமாய்ச் செயல்பட மறுக்கிறாய்!
சுலபமாய்ப் பிறரைப் பழிக்கின்றாய்!

உனக்கு நீயே யாரென்று
உணருகின்ற நாள்வரை
உயர்வு என்பதை உன்வாழ்வில்
உணராமல் போவாயே!

பெண்ணே!

வெட்கம் என்பது தவறல்ல
அடக்கம் என்பதும் தவறல்ல!
அன்பு என்பது தவறல்ல
கருணை என்பதும் தவறல்ல!

உனக்காய் உன்னுள் ஊறும்
உணர்வுதன்னை மதித்திடு
உற்றோர் மற்றோர் பெருமைக்கு
உணர்வை மாற்ற மறுத்திடு!

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான்
அகில வாழ்க்கை புரிந்திடு!
ஆணோ பெண்ணோ தனித்திருப்பின்
ஆக்கம் ஏதுமில்லை விளங்கிடு!

ஆயுள்காலம் முழுமையும்
அடுத்தவர் உயர்ந்திடத் தோள்கொடு!
அனு முதல் அண்டம் வரை
அனைத்தும் உன்வசப்படும் நம்பிடு!

மங்கையர் தினமாம் இந்நாளை
மாட்டுப் பொங்கலாய் நினையாமல்
மாற்றம் காணப் புவியதனில்
மனமேற் கொண்டு உழைத்திடு!

வாணி, சென்னை (உயிர்ப்பூ நூலிலிருந்து.....)

Wednesday, February 16, 2011

சாதிமறுப்பு பார்ப்பனப் புரோகிதமறுப்புத் திருமணம்

பெரியாரியலாளரும், வனத்துறையில் பணியாற்றுபவருமான தோழர் இல. கோவிந்தசாமி - செயசிறீ இணையரின் மகள் செ.கோ. விடுதலைச்செல்விக்கும்,

திருச்சிராப்பள்ளி, எம்.ஏ.எம். பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருமிகு முனைவர் கி.குமார் - ச.விசயலெட்சுமி இணையரின் மகன் வி.கு.விமல்குமாருக்கும் சாதிமறுப்பு, புரோகிதமறுப்புத் திருமணம் 16.02.2011 அன்று திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான்திருமலை, யோகலெட்சுமி திருமணமணடபத்தில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா. இளங்குமரனார் தலைமையில் நடைபெற்றது.


பார்ப்பனப் புரோகிதர்களை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் தோழர்கள் மஞ்சை வசந்தன், தா.பெ.அ. தேன்மொழி, வி.சி.வில்வம் ஆகியோர் எழுதிய

கட்டுரைகள் அடங்கிய நூல் (தன்மதிப்புத் திருமணம் ஏன்?) விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


இந்தத் திருமணவிழாவின் சிறப்பு என்பது, சாதிமறுப்புத் திருமணம் என்பதும், கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பதும்தான்.

பெரியாரியலாளர்களும், முற்போக்காளர்களும் பெயரளவுக்கு மட்டுமே கொள்கைபேசிவிட்டு, மேடையில் மட்டுமே முழங்கிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற முன்மாதிரிச்செயல்களைச் செய்ய முன்வருவது நல்லது!

Sunday, November 28, 2010

நல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும் - குமரன்தாசு

"நல்லநேரம், இராகுகாலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே ‡ இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நல்ல கொழுத்த இராகுகாலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் இராமசாமி! இராமசாமி! என்று கூப்பிட்டால், இவன் இப்போது இராகுகாலம் நான் வரமாட்டேன் என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு குடுகுடு என்று ஓடிப்போய் வந்தேன் என்று தானே கூறுவான்? அப்பொழுது எங்கே போயிற்று இராகுகாலம்?"

--தந்தை பெரியார்.


நான் தினசரி பேருந்தில் பயணம் செய்யும் விதமான பணியில் இருப்பதால் ஓர் ஆண்டின் 365 நாட்களும் பல்வேறு விதமான சூழலில் பயணம் செய்திருக்கிறேன். மிகவும் நெருக்கியடித்துக் கொண்டு ஒரு காலின் மீது மற்றொரு காலை வைத்துக் கொண்டு நிற்பதற்குக்கூட இடமில்லாதவாறும். அதே பேருந்து வழித்தடத்தில் ஓட்டுநர் நடத்துநர் மற்றும் நான் என மூவர் மட்டுமேயும் அமர்ந்து பேருந்து காத்தாடவும் பயணம் செய்திருக்கிறேன்.

ஏன் இந்தத் தலைகீழான நிலை? ஒரு நாள் மிகமோசமான இடநெருக்கடி; மற்றொரு நாள் ஆளேயில்லாத வீண் பயணம். பொதுவாக நகர்ப்புறங்களில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என காலை 8 மணியிலிருந்து 10 மணிவரையும், அதேபோல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பும் 5மணியிலிருந்து 7மணி வரையும் பேருந்தில் நெரிசல் மிகுந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல கிராமப்புற வழித்தடத்தில் விவசாயக் காலத்தில் களைஎடுக்க, அறுப்புக்கு என்று உழைக்கும் பெண்கள், கூட்டம் கூட்டமாக ஏறும் போது பேருந்தில் நெரிசல் மிகுவதையும் நாம்புரிந்து கொள்ள முடியும்.ஆனால் ஓர் ஆண்டின் குறிப்பிட்ட சில நாட்களான, தை, மாசி, பங்குனி, ஆனி, ஆவணி போன்ற மாதங்களின் முகூர்த்த நாட்களில் மட்டும் நாம் மேலே கூறிய‡ நிற்பதற்கு இடமில்லாத நெரிசலும் பிற நாட்களில் அதுவும் ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் முற்றிலும் கூட்டமில்லாத வெறிச்சோடிய நிலையையும் பேருந்தில் நாம் காணும்போது நமது தமிழ் மக்களிடம் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை நம் நாட்டின் ஓரு துறை (போக்குவரத்துத்துறை) யையே எவ்வாறு பாதிக்கிறது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

அடுத்து பேருந்துப்பயணம் செய்பவர் பற்றிய ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துப் பார்த்தால் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகவே பயணம் செய்வது புலனாகும். தென்மாவட்டங்களில் சராசரியாக ஒரு பேருந்தில் 50 ஆண்களுக்கு 10 பெண்கள் என்ற விகிதத்திலேயே பயணம் செய்கின்றனர். அதுவும் பெண்களின் பேருந்துப் பயணம் பெரும்பாலும் பகல் பொழுதுகளிலேயே நிகழ்கிறது. மாலை 6 மணிக்குமேல் பயணம் செய்வது மிகக்குறைவு. இரவு 9மணிக்கு மேல் முற்றிலும் இல்லை என்றே கூறலாம்.

இதற்குமாறாக ஆண்களைவிடப் பெண்கள் அல்லது ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பயணம் செய்யும் நாட்கள் இந்த முகூர்த்த நாட்களேயாகும். அதுவும் நிறைய நகைகளையும், பட்டுப்புடவையையும் அணிந்து கொண்டு பங்குனி, சித்திரை மாத வெயிலில் பெண்கள் பேருந்தில்படும் தொல்லை மிக அருவருப்பானதாகும்.

இவ்வாறான நேரத்திலேயே திருடு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சேட்டைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் முகூர்த்த நாட்கள், திருவிழாக்காலம் போன்ற இந்துமதம் சார்ந்த நாட்களில்தான் பெண்கள் அதிகமாகப் பயணம் செய்கின்றனர். ஆனால் பணி, உழைப்பு, பொருளீட்டல் போன்ற காரணங்களுக்காக ஆண்களைப்போல் வீட்டைவிட்டு வெளியேவந்து பயணம் செய்வது மிகக்குறைவாகவே உள்ளது.

இன்றும் பெண்கள் திருமணம், திருவிழா, கோவில், குளம் என இந்துமதப்பண்பாடு சார்ந்து மட்டுமே வீட்டை விட்டு வெளிவருவதும் பயணம் செய்வதும் அதிகமாக இருக்கிறது என்ற நிலை. தமிழர் வாழ்வுமுறை காலத்தால் எந்த அளவு மாற்றம் அடைந்துள்ளது என்பது சிந்திக்கத்தக்கது.
பயணம் என்பதும் ஒருவகை நுகர்வுதான்; எனவே மற்ற எல்லாவித நுகர்வுகளிலும் பெண்கள் தமக்குரிய பங்கை, சரிபாதியை ( 50 % ) நுகரமுடியாமல் இருப்பதைப்போலவே பயணத்திலும் மிகக்குறைவாகவே ‡ அதுவும் மதம்சார்ந்தும், ஆண்சார்ந்தும், கேளிக்கை சார்ந்தும் பயணிக்கிறார்களேயன்றி தன்மதிப்புசார்ந்த பயணம் மிகக்குறைவே. இதில் கிராமம், நகரம், மாநகரம் என்ற வெளிக்கேற்ற மாறுபாடுகள் உண்டு.

இக்கட்டுரை இத்தகைய ஆண் பெண் ஏற்றத்தாழ்வு பற்றியதல்ல. மாறாக கால , நேரம் ( நல்ல நேரம்‡ கெட்ட நேரம்) தமிழர் வாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் புரியும் வினை பற்றியதாகும். ஆம் இந்துக்கள் என்போரின் ஒவ்வொரு செயலுமே காலம், நேரம், நாள், நட்சத்திரம் பார்த்தே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பார்ப்பனியம்/ இந்துமதம் வரையறுத்துத்தந்த காலவெளிகளிலேயே இந்துக்கள் வாழ்வு இயங்குகிறது எனலாம். அதன் ஒரு உதாரணம்தான் நான் மேலேகூறிய பேருந்துப்பயணம்.

பேருந்துப்பயணம் மட்டுமல்ல, இந்துக்கள் தங்கள் மயிரைச் சிரைத்துக் கொள்வதைக்கூட கிழமை பார்த்தே மேற்கொள்கின்றனர். வெள்ளியும் செவ்வாயும் முடிவெட்டிக் கொள்வதில்லை. அதே போல் இந்துக்கள் வெள்ளியும் செவ்வாயும் அசைவம் உண்பதில்லை. நம்மைப் ¼ ப V ன் ற வ ர்க ள் முடிவெட்டிக் கொள்ளவும்,இறைச்சி வாங்கவும் இந்த வெள்ளி செவ்வாயைப் பயன்படுத்தினால் சிரமம் இருக்காது. இன்று இந்துக்கள் விரதம் இருக்கும் நாட்கள் புதிதுபுதிதாக முளைத்து வருகிறது. சிலர் சனிக்கிழமையைத் தேர்வுசெய்து அன்று விரதம் என்கிறார்கள், சிலர் திங்கள் கிழமையை விரதநாளாக முடிவு செய்து அன்று ஒருநாள் அசைவம் உண்பதில்லை எனக் கராறாக மறுத்து விடுகின்றனர்.

இந்த முடிவுகளுக்குப் பின்னே யாரோ ஒரு சோதிடரின் கூற்றும், அசைவம் என்பது தீட்டு; சைவம் என்பது உயர்வு என்ற கருத்தும் மறைந்திருக்கிறது. இவ்வாறான நாள் கிழமை , நல்ல நேரம் ‡ கெட்ட நேரம் என்ற மனநோய் முற்றி சிலர் தங்கள் வீட்டுப் பெண்களின் குழந்தைப் பிறப்பை நல்லநேரத்தில் அமைய வேண்டும் என்பதற்காகக் குறித்த நேரத்தில் அறுவை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்படி செய்யும் அளவிற்குத் தீவிரமாகியுள்ளது.

இந்துக்கள் பிறப்பிற்கு நேரம் பார்ப்பதைப் போலவே இறப்பிற்கும் நேரம் பார்ப்பதும், பிணத்தையும் நேரம் பார்த்து எடுப்பதும் வழக்கமாகும். மேலும் ஒரு இந்து வெள்ளிக்கிழமை இறந்து அடக்கம் செய்யப்படுவாரேயானால் அவருக்காக இவர்கள் மேற்கொள்ளும் இரண்டாம்நாள் காரியத்தை (பால் ஊற்றுவது) சனிக்கிழமை செய்வதில்லை; ஒரு நாள் விட்டு ஞாயிற்றுக்கிழமையே செய்வர். அதேபோல் ஒரு இந்துவை சனிக்கிழமை அடக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் சனிப்பிணம் தனிப்போகாது என்ற அச்சத்தின் காரணமாக ஒரு கோழிக்குஞ்சை பிணத்தின் கால்ப்பகுதியில் கட்டி மயாணத்திற்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.

இன்னும் ஒரு நகைப்பிற்குரிய நம்பிக்கையும் இந்துக்கள் மத்தியில் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ( குளிகை ) இறந்துவிடும் இந்துவின் சடலத்தை வீட்டுக்கு வெளியே எடுத்துச்செல்ல வீட்டு வாயிலைப்பயன்படுத்தக்கூடாது என்பதும் வீட்டுச்சுவரை உடைத்து புதிய வழியை உருவாக்கி, அதன் வழியே பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும் இருக்கிறது.

சாதாரண மனிதர்களின் நிலை இது என்றால் நாட்டின் உயர்கல்வி கற்ற அறிஞர்கள் , விஞ்ஞானிகளின் நிலையோ இதைவிடக் கேவலமாக இருக்கிறது. இவர்கள் புதிதாக வடிவமைத்து விண்ணில் ஏவும் செயற்கைக்கோளை நேரம் (இராகுகாலம், எமகண்டம்) பார்த்து ஏவுவது என்பது, ஒரு இந்து எவ்வளவுதான் உயர்ந்த கல்விகற்று இருந்தாலும்கூட அவனால் இந்து மதப்பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் மீற இயலாது என்பதையே காட்டுகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அரசு, அதிகார வர்க்கம் முழுதுமே இவ்வாறுதான் இருக்கிறது. ஒரு மதச்சார்பற்ற அரசின் திட்டங்கள் துவக்க விழாக்கள், அடிக்கல் நாட்டல்கள் என அனைத்துமே இந்துப்பார்ப்பனிய வழிகாட்டலின்படி இங்கு நேரங்காலம் பார்த்தே மேற்கொள்ளப்படுவது மதச்சார்பின்மை என்பதைக் கேலிக்குரிய ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழர் வாழ்வு விவசாய உற்பத்தியை முழுமையாகச் சார்ந்து இயங்கிய காலத்தில் ஆடிவிதைப்பு துவங்கி தைஅறுவடை முடியும்வரை வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அதாவது கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு இடம் கொடுப்பதில்லை. தைக்குப்பிறகே அதாவது விவசாயப்பணிகள் முடிந்து நெல் வீடுவந்து சேர்ந்த பிறகே தம்வாழ்வின் பிறதேவைகளை‡மறு உற்பத்தி , பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய முயல்வர். இதில் நியாயமும் உண்டு.

ஆனால் இயற்கைச் சூழல் முற்றிலும் குழம்பிப் போய்விட்ட இன்றைய நிலையில் அதைச்சார்ந்து விவசாய உற்பத்தியும் மாறியுள்ள நிலையில் மேலும் குறுகிய காலப்பயிர் போன்றவைகள் நடப்பிற்கு வந்துவிட்ட நிலையிலும் ‡ மேலும் நகர்ப்புறத்தில் விவசாய உற்பத்தியைச் சாராத நிலையில் வாழும் மக்களும் கடந்த காலத்தைப் போலவே ஆடி, மார்கழி , புரட்டாசி போன்ற மாதங்களைப் பீடைமாதம் என்று புறந்தள்ளுவதும் வைகாசி, ஆனி, ஆவணி, போன்ற மாதங்களின் குறிப்பிட்ட ஒரு சில நாள்களை மட்டுமே அதாவது 365 நாள்களில் வெறும் 50 நாள்களை மட்டுமே நல்ல நாள்களாகக் கருதி அந்நாட்களில் அடித்துப் பிடித்து தம் இல்ல விழாக்களை நடத்துவதும் அறிவுக்கு ஒவ்வாத நடைமுறையாக இருக்கிறது என்பதோடு பல்வேறு நெருக்கடிகளையும் கொண்டு வருகிறது.

குறிப்பாக அய்ப்பசி, கார்த்திகை போன்ற அடைமழைக் காலத்தில் அதிகாலை 6 மணிக்கு நல்ல நேரம் என்று கருதி திருமணத்தை நடத்துவதை நாம் காண்கிறோம். காலைக்கடனை முடிக்க கழிவறையைத் தேடும் நேரத்தில் மழைக்கும் புயலுக்கும் நடுவே திருமணத்தை நடத்தி முடித்தே தீரவேண்டிய கட்டாயம் என்ன வந்தது?

இந்துக்கள் பெரும்பான்மையாக திருமணத்தை நடத்தும் ஆவணி மாத முகூர்த்த (வளர்பிறை) நாளில்தான் தமிழகம் முழுதும் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதில்லை; காய்கறித் தட்டுப்பாடு, வாழைஇலை, பழங்கள், பூமாலை என அனைத்திற்கும் தட்டுப்பாடு; அதனால் விலையேற்றம்; பேருந்துகளில் கூட்ட நெரிசல் என்று ஒரு செயற்கையான நெருக்கடியை இந்த நல்ல நாள் ஏற்படுத்துகிறது.
இந்துத் திருமணமுறை தாலி , பார்ப்பனச்சடங்கு, வரதட்சணை போன்ற வற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையோர் இவ்வாறு திருமணத்தை மேற்கொள்வதால் ஏற்படும் நெருக்கடியை எல்லோருமே சந்திக்க வேண்டியுள்ளது.

இத்திருமண முறையை இன்று பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரும் ஆதிக்கச் சாதியினர் முதல் அருந்ததியர் வரை கடைப்பிடிக்கின்றனர். பார்ப்பனர்கள் இந்துக்கடவுள்களுக்குத் திருமணம் நடைபெறும் (ஆடித் திருக்கல்யாணம் ) ஆடி மாதத்தில் தங்களது இல்லத் திருமணங்களை நடத்திக் கொள்வர். ஆடியும் மார்கழியும் அவர்களுக்கு மட்டும் நல்ல மாதங்கள். இத்தகையநிலையில் இந்த நல்ல (முகூர்த்த) நாள் என்ற ஏற்பாட்டால் தொழில் உற்பத்தித் துறையில், வணிகத்துறையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள் பற்றியும் நாம்சிந்திக்க வேண்டியுள்ளது.

இங்கு தமிழ்ச்சமூகத்தில் (சிறுதொழில்) பொருள் உற்பத்தி என்பது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கு என்று மட்டுமல்லாமல் பிரதானமாக பண்பாடு சார்ந்ததாகவும் இருக்கிறது. அதாவது தமிழர்களின் அன்றாடத்தேவை சார்ந்த கொள்முதலை மட்டும் நம்பி இங்கு பொருள் உற்பத்தி அமையுமேயானால் அது ஒரே சீராக இருக்கும்.

மாறாக குறிப்பிட்ட மதப்பண்பாடு சார்ந்த நாட்களை மய்யப்படுத்திய நுகர்வு மேலோங்கி இருப்பதால், ஆண்டின் சில நாட்களை மய்யப்படுத்திய நுகர்வாக இருப்பதால் தொழில், வணிகம் ஒரு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு இந்துக்கள் தம் இல்லத்திருமணத்தை முன்னிட்டு கொள்முதல் செய்யும் மளிகைப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள் மற்றும் சீர்சாமான்கள் எனப்படும் கட்டில், மெத்தை, கிரைண்டர், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றில் கிரைண்டர் அல்லது ஸ்டீல்பீரோ என்பனவற்றின் உற்பத்தியைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.

முன்நாளில் ஆட்டுக்கல் , அம்மி வாங்கியவர்கள் காலமாறுதலுக்கு ஏற்ப இன்று கிரைண்டர் , மிக்ஸி வாங்குகிறார்கள். இந்தக்கிரைண்டர் எனப்படும் மாவு அரைக்கும் இயந்திரம் நகர்ப்புறங்களில் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. எனவே வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அவசியம் எனக்கொள்ளலாம். எனவே கிரைண்டர் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள் கையில் கூடுதலாக பணம் புழங்கும் நேரத்தில் கிரைண்டர் வாங்கலாம். இன்றைக்குப் பெரும்பாலும் அரசு போனஸ் வழங்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த கிரைண்டர் அல்லது பிற பொருட்களின் விற்பனை கூடுதலாக இருக்கும்.

ஆனால் இன்றைக்கு இந்தப் பொருட்களின் விற்பனை என்பது கல்யாண சீசன் என்று சொல்லக்கூடிய ஆனி, ஆவணி, வைகாசி என்ற மாதங்களின் முகூர்த்த நாட்களை மய்யப்படுத்தியதாகவே இருக்கிறது. ஏனென்றால் இவை பயன்பாட்டிற்காக வாங்கப்படுவதில்லை. மாறாக, சீர் கொடுப்பதற்காகவே வாங்கப்படுகின்றன. இவ்வாறு சீருக்காக வாங்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மூட்டையாகக் கட்டப்பட்டு ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்து இந்துவின் வீட்டின் மூலையிலும் தூங்கிக் கொண்டிருப்பது தனிக்கதை.

ஆக இப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழில் பட்டறைகள் முகூர்த்த காலத்தில் அதிகமாக இவற்றை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்நிலைக்கு நேர் எதிராக முகூர்த்தமில்லாத ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களிலும் பிற மாதங்களின் முகூர்த்தமற்ற காலத்திலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். ஒரு தொழில் நிறுவனத்திற்கு இது எவ்வாறு சாத்தியம்? மேலும் முகூர்த்த காலத்தில் தேவையை ஒட்டி கூடுதலாகத் தொழிலாளரைச் சேர்த்தால் பிற முகூர்த்தமற்ற நாட்களில் அவர்களுக்கு வேலை கொடுக்கவும் சம்பளம் கொடுக்கவும் முடியுமா ? அதே போல்தான் இப்பொருட்களை வாங்கி விற்கும் வணிகர்களுக்கும் , கடைகளுக்கும் நெருக்கடி. திருமணசீசனில் ஒரேநாளில் சமாளிக்க முடியாதவாறு வாடிக்கையாளர்கள் வந்து குவிவதும் அவர்களைக் கவனிப்பதற்கு ஆள் பற்றாக்குறையின் காரணமாக வாடிக்கையாளர் வருத்தமுற்றுத் திரும்பிச்செல்வதும் மற்றொருபுறம் வாடிக்கையாளர் விரும்பும் பொருள் தட்டுப்பாடு காரணமாக வியாபாரம் கையைவிட்டுப் போவதும் என்ற நிலையில் வணிகநிறுவன உரிமையாளருக்கு ஏற்படும் மனஉளைச்சல். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரக்கூடிய நெருக்கடியாகும்.

இந்தவிதமான நெருக்கடிக்கு மாறாக ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களில் தொழில் துறையினரும் வணிகர்களும் சந்திக்கின்ற நெருக்கடி வேறுவிதமானது. அன்றாடச் செலவுகளுக்கும், மின்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், வேலையாள் சம்பளம், கடைவாடகை போன்றவற்றைச் சமாளிப்பதற்கும் சரக்கு சப்ளை செய்தவர்களுக்குக் குறித்த தேதியில் பணம் கொடுக்க முடியாத நிலையும் என்று இது இன்னொரு விதமான நெருக்கடி. இந்த நேரத்தில்தான் சிறு வியாபாரிகள் வட்டிக்குக் கடன் வாங்கி பிறகு அது தொடர்கதையாகி இறுதியில் தனது கடையையே இழந்து தெருவில் நிற்கும்படியாகிறது.

ஓரளவு வசதியான பின்புலமுள்ள வணிகர்களாலேயே இந்த நல்லநாள் என்ற பண்பாடு ஏற்படுத்தும் நெருக்கடியை ஈடு கொடுத்துச் சமாளிக்க முடிகிறது. மற்ற சாமானியர்களுக்கு இந்த இந்துமதம் சார்ந்த நல்லநாள் என்பது குழிபறிக்கும் நாளாகவே இருக்கிறது.

அடிக்குறிப்பு ‡ 1 :

இவ்விடத்தில் வரதட்சணை, சீர் என்பதே கூடாதது, தவறானது என்ற கருத்துதான் சரியானது, முற்போக்கானது என்றாலும் இன்றும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த வழக்கம் ஆதிக்கம் செய்து வருகின்ற நிலையில் அதை ஒட்டியே சிறு தொழில் உற்பத்தி , வணிகம் இயங்குகின்ற நிலையில் இந்த முகூர்த்த நாட்கள் என்பவை எவ்வாறு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

கடந்த 2008‡ ஆம் ஆண்டின் மொத்த சுப முகூர்த்த நாட்கள் 54. இதிலும் வளர்பிறை முகூர்த்தநாட்கள் என்பவை சனவரியில் ஒன்று, பிப்ரவரியில் இரண்டு, மார்ச்சில் நான்கு, ஏப்பிரலில் இரண்டு, மேயில் மூன்று, ஜுனில் இரண்டு, ஜூலையில் ஒன்று, ஆகஸ்ட்டில் கிடையாது, செப்டம்பரில் நான்கு, நவம்பரில் மூன்று , திசம்பரில் மூன்று. ஆக மொத்தம் 25 நாட்கள். இந்த 25 நாட்களில்தான் தமிழகத்தின் ஒட்டு மொத்தத் திருமணங்களும் நடைபெறுகின்றன. இன்று இந்துக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றொரு போக்கு வெள்ளிக்கிழமை இரவு வீட்டு வாசலில் கற்பூரம் கொளுத்துவது; அதே போல் வணிகர்கள் கடைமூடும் வேளையில் கற்பூரம் ஏற்றி தேங்காயை கடைஎதிரே வீதியில் சிதறடிப்பது என்பதுமாகும். காரைக்குடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு மட்டும் குறைந்தது 1000 தேங்காய்கள் வீணடிக்கப்படுகின்றன. வீட்டுச்சமையலுக்கு முழுத்தேங்காய் வாங்கமுடியாமல் இன்றும் தேங்காய்ச்சில் வாங்கிச் செல்லும் ஏழைகள் வாழும் ஊரில் மாதம் 5000‡க்கும் அதிகமான தேங்காய்களை வீதியில் அடித்து வீணடிக்கின்றனர்.
இதுபோல் காலத்தின் ஒவ்வொரு நாளின் மீதும் புதிது புதிதாக நம்பிக்கைகளை பிழைப்புவாதிகள் , சோதிடர்கள் , மதவாதிகள் , பார்ப்பனர்கள் , வியாபாரிகள் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றனர். சமீபத்திய உற்பத்தி ‘அட்சயதிதி’ ‡ அன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற வழக்கம். இதற்கு முன்பதிவு செய்யும் அளவிற்கு இன்று நிலைமை முற்றிவிட்டது.
அன்றைய நாளில் மட்டும் பல கோடிகளுக்குத் தங்கம் விற்பனையாவதாகப் புள்ளிவிபரங்கள் போட்டி போடுகின்றன. இந்த மூடத்தனத்தில் வங்கிகளும் (ணூளீணூளீணூ வங்கி அட்சயதிதி அன்று தங்கக்காசு விற்பனையை அமோகமாகச் செய்கிறது) இதையயல்லாம் காணும் போது இந்த இந்துக்களைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேறுயாரும் உண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனையும் சுற்றிவருவதால் ஏற்படும் மாறுதல்களையே பகல், இரவு, காலை, மாலை, முற்பகல், பிற்பகல், நன்பகல், முன்னிரவு, பின்னிரவு, நள்ளிரவு, எனவும் இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் மாறுதல்களையே நாள் , வாரம், ஆண்டு என பலவாறு கணக்கிடுறோம். இவ்வாறு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக் கணக்கிடும்போது அந்த 24 மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தை மட்டும் இராகுகாலம், எமகண்டம் என்றும் மற்றொரு நேரத்தை சுபமுகூர்த்தம் என்றும் கூறுவதும், அதே போல் பூமி சூரியனைச்சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவான 365 நாள்களில் ஒரு சில நாள்களை மட்டும் நல்லநாள்கள் ( முகூர்த்த நாள்கள் ) எனக் கருதுவதும் அறியாமை, மூடத்தனம் என்பதை சித்தர்கள் துவங்கி பெரியார்உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் தமிழர்கள் அறிவு பெற்ற பாடில்லை.

நியாயமாக இவ்விடத்தில் தமிழர்கள் என்று பொதுவாகக் கூறுவது தவறாகும். ஏனெனில் இசுலாமியர் இவ்வாறு நல்லநேரம் பார்த்துத் திருமணம் போன்றவற்றைச் செய்வதில்லை 1 ஆ: எனவே இந்துக்கள் என்று கூறுவதே சரியாகும். ஆக, இந்துக்கள் இன்றைய நவீன யுகத்திலும் 2000 ஆண்டு வழக்கமான நாள் நட்சத்திரம் பார்த்துச் செயல் ப டு வ ç த த் தொ ட ர் வ து வினோதமும் வேடிக்கையுமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரம் பார்த்துச் செயல்பட்டது முட்டாள்தனமில்லை. அன்று வானமும் , நிலவும், நட்சத்திரங்களுமே காலம், திசைகாட்டும் கருவி. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக்கூட்டம் வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றினால் மழைவரும் என்பதைத் தனது அனுபவத்தில் கற்றிருந்த அன்றய மனிதன் உடனே விதைத்தான். இதுபோல் வானில் நட்சத்திரக் கூட்டங்களின் வடிவம், இடம் இவற்றைக் கண்டே தன் அன்றாடப்பணிகளை மேற்கொண்டான். பின்பு இதுவே வழிகாட்டும் பதிவாக மாறி ஆவணப்படுத்தப்பட்டு பஞ்சாங்கம் என்ற பெயர் பெற்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் கூறும் செய்திகளைக் கேட்டு விவசாயிகள் செயற்படுவதைப் போல் அன்று பஞ்சாங்கத்தைப் பார்த்து மனிதர்கள் செயல்பட்டனர்.

ஆனால் காலப்போக்கில் பஞ்சாங்கத்தில் பல்லி விழும் பலன் போன்றவை இடைச்செருகப்பட்டு பார்பனியமயமாகிப் போனதாக த. வி. வெங்கடேசுவரன் கூறுகிறார். (நாள் என்னசெய்யும், கோள் என்னசெய்யும் நூலில் ...) அந்தப் பழைய பஞ்சாங்கத்தையே இன்றும் பார்த்துத் தங்களின் செயல்களை இந்துக்கள் மேற்கொள்வது மிகவும் மூடத்தனமாகும். இன்று எவரும் வானத்தைப்பார்த்து நேரம் சொல்ல வேண்டியதில்லை; திசை சொல்லவேண்டியதில்லை. முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்கள் இரவில் வானத்தை, நிலவை, நட்சத்திரத்தைப் பார்த்துத் தங்களின் பயணத்தின் திசையையும், நேரத்தையும் கணித்துக் கொண்டனர். இன்று திசை காட்டும் கருவி, அலைபேசி (துலிணுஷ்யிe ஸ்ரீஜுலிஐe) ழழியிவதீ வீழியிவதீ போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் மழை,புயல் போன்றவற்றால் வானம் சரிவரத்தெரியாமல் திசையையும்,நேரத்தையும் சரிவரக் கணிக்கமுடியாமல் அவதிப்படும் நிலை தற்போது நவீனக் கருவிகளின் பயன்பாட்டின் காரணமாகக் குறைந்துள்ளது.

ஆக காலத்தால், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால் மக்கள் மாறவேண்டும். ஆனால் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துத் திருமணம், வீடு குடிபுகுதல், தொழில் துவங்குதல் போன்ற செயல்களை இந்துக்கள் இன்றும் கைவிடாமல் தொடர்வதால் ஏற்படும் சிரமங்களை, நெருக்கடிகளைப்பற்றி சமூக அக்கறையுள்ள யாரும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
ஆனால் சமூக அக்கறைகொண்டு அரசியல் இயக்கங்களில் செயல்படும் தோழர்களே கூட இந்த நல்ல நாள், நல்ல நேரம் போன்றவற்றைப் பற்றித் தெரிந்தே கண்டும் காணாமல்விடுவது அல்லது கவனமின்றிக் கடைப்பிடிப்பது போன்ற நிலைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
முதலாளிய, பார்ப்பனிய இயக்க, கட்சித் தோழர்களைப்பற்றி நாம் இங்கு கூறவில்லை. சமூக மாறுதலுக்காக நிற்கும் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தமிழ்தேச விடுதலை, சாதி ஒழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கம், பெண் விடுதலை இயக்கம் சார்ந்த தோழர்களைப் பற்றியே இங்கு கூறுகிறோம். நமக்குத் தெரிந்தவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான தோழர்கள் நல்லநாள், நேரம் பார்த்தும் சடங்கு சம்பிரதாயங்களோடு சுயசாதித் திருமணங்களையே நடத்துக் கொள்கின்றனர். விதிவிலக்கான ஒரு சிலரும் தங்களின் சுயபுரிதல், நேர்மையின் காரணமாகத்தான் சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணங்களை மேற்கொண்டனரே தவிர இதில் கட்சிக்கட்டுப்பாடு ஏதும் இல்லை.

இது நாள் வரை பெரும்பான்மையான கட்சித் தோழர்கள் மத்தியில் சாதி, சடங்கு விசயத்தில் பெரிய விழிப்புணர்வோ, கவனம் குவிக்கப்படவோ, நாம் செய்வது சரியா? என்ற கேள்வி எழும் நிலையோ ஏற்படுத்தப்படவே இல்லை. மேலும் வேதனை என்ன வென்றால் இதுபோன்ற சுயசாதி, சுபமுகூர்த்த, சடங்கு சம்பிரதாயத் திருமணங்களுக்கு கட்சித்தலைமைத் தோழர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்குவது ஏதோ புரட்சிகர மாநாடு போல செங்கொடி கட்டியும், பேனர்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருப்பதும் தான்.

ஒரு வேளை புரட்சிக்குப்பிறகு ஒரு சோசலிச அதிகாரம் நிறுவப்பட்டபின்புதான் இதுபோன்ற பண்பாட்டு விசயங்களில் கவனம் குவிக்கவேண்டும்; அது வரை ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற தெளிந்த முடிவோடே இவ்வாறு பெருந்தன்மையாகச் செயல்படுகின்றனரோ என்று கருதவேண்டியுள்ளது.

ஏனென்றால் எனக்குத் தெரிந்த (னி.ஸி) மார்க்சிய இலெனினிய இயக்கத்தோழர்கள் பலரும் இது போன்ற புரிதலில் தான் இருந்தனர்; செயல்பட்டனர். குறிப்பாக 70களில் மிகத்தீவிரமாக செயல்பட்டுத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு சிறைசென்ற தோழர் ஒருவர் இந்த சாதி, சடங்கு, நாள்நட்சத்திரம் போன்ற விசயங்களில் எவ்வித மறுப்பும் கூறாமல் குடும்பத்தாரோடு உடன்பட்டுப் போனதோடு நம்மோடு விவாதிக்கும்போது ‡ ‘இவையயல்லாம் புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தில்தான் மறையும்; அதுவரை இதற்கெதிராகப் போராடவோ, மாற்ற முயற்சிக்கவோ கூடாது’ என‡விவாதிக்கவும் செய்தார்.

இந்த விதப்புரிதல் கொண்ட தோழர்கள் சி.பி.அய், சி.பி.எம், சி.பி.அய். (எம்‡எல்) என்ற மூன்று இயக்கங்களிலும் பரவலாக உள்ளனர். ஏனென்றால் பண்பாட்டு விசயத்தில் கறார்தன்மையும், உறுப்பினர் தகுதியில் ஒன்றாக பண்பாட்டு நடவடிக்கைகளை இணைக்காததும் இதற்குக் காரணமாகும்.

இதேநிலை தமிழத்தேசிய இயக்கங்களிலும் காணப்படுகிறது. திராவிடர் கழகங்கள் இவ்விசயத்தில் ஓரளவு முன்னேறி உள்ளன எனலாம். ஏனெனில் அவை பார்ப்பனிய பண்பாட்டு விசயங்களை மய்யப்படுத்தி அவற்றிற்கெதிராக இயங்குவதால் இ ந்நி ç ல. ஆனால் அ தி லு ம் ¼ த V ழர்க ள் ப ல ரு ம் சுயசாதித்திருமணங்களை மேற்கொள்வதே அதிகமாகும். அடுத்து தாலி மறுப்பு, பார்பனியச் சாதிமறுப்பு, சடங்கு மறுப்பு என முற்போக்காக மேற்கொள்ளப்பட்ட சில திராவிடர்கழகத் திருமணங்கள் கூட இந்துக்கள் நம்புகின்ற அதே நல்ல (முகூர்த்த) நாளில் நடைபெற்றது ஏன் என்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

கவனமின்மை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம் சாதி என்ற கொடூரமானதும், கெட்டிதட்டிப்போன ஒன்றையே புறக்கணித்த தோழர்களுக்கு இந்த ‘நல்ல நாள்’ என்ற மூடநம்பிக்கையைப் புறந்தள்ளுவதா கடினம் என்ற கேள்வியும் எழுகிறது.
அண்மையில் முன்னாள் கம்யூனிஸ்டு (நக்சல்பாரி), இன்னாள் ‡ தியாகி இமாணுவேல் பேரவை, சாதி ஒழிப்பு முன்னணியின் ‡ செயல் வீரருமான தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்த மூத்த தோழர் நமசு, தோழர் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ என்ற நாவல் மீதான விமர்சனக் கூட்டத்திற்கு (30.11.2008 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி) ஏற்பாடு செய்திருந்தார். கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்கள் 150. நூறுபேர் வருவார்கள் என்றார்; (தோழர் நமசுவுக்கு 30.11.2008 அன்று முகூர்த்தநாள் எனத் தெரியவில்லை) ஆனால் கூட்டத்திற்கு இருபது நபர்களுக்குள்ளாகவே வந்திருந்தனர். இதுதான் இன்றைய நிலை. கலை இலக்கிய அரசியல் கருத்தரங்குகளை சனி, ஞாயிறு போன்ற நாட்களிலேயே இன்று பெரும்பாலும் நமது தோழர்கள் நடத்துகின்றனர். ஏனெனில் கலந்து கொள்பவர்களின் அலுவலகப்பணி பாதிக்கக்கூடாது என்பதால்தான். இன்று இதே நோக்கிலேயே இந்துக்களும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் முகூர்த்தநாளைத் தேர்வுசெய்து திருமணத்தை நடத்துகின்றனர். இந்துக்கள் தங்களின் சடங்கு சம்பிரதாயத்தை, நம்பிக்கையை நவீனச்சூழலுக்கு ஏற்பவும் அதே சமயம் கைவிடாமலும் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.

இனிமேல் நமது தோழர்கள் கூட்டங்களை, கருத்தரங்குகளை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்தவேண்டும். ஏனென்றால் சனியும் செவ்வாயுமே இந்துக்களைப் பொருத்தவரை மோசமான(?!) நாட்களாகும். வேறு என்ன செய்வது! நம்மால் பெரும்பான்மையான மக்களை (இந்துக்களை) மாற்ற முடியாதபோது, மேலும் சமூகமாற்றத்திற்காக நிற்கும் நம்மாலேயே (மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வாதிகளாலேயே) நல்ல நாள், நேரம், முகூர்த்தநாள் போன்ற பார்ப்பனிய மூடத்தனத்தை எதிர்த்து, மீறி இல்ல நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாதபோது குறைந்தபட்சம் நமது குடும்ப உறுப்பினர், உறவினரோடு எதிர்த்துப் போராடி தோற்றுப்போகாமல் கூட அப்படியே அவர்களின் விருப்பத்திற்குட்பட்டுப் போகும் நிலையில் கலை இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், போராட்டங்கள் ஏன் புரட்சியேயானால் கூட இந்துக்களின் முகூர்த்த நாள் நல்லநாள் தவிர்த்த பிற கரிநாட்களில் (அமங்கலநாட்களில்) எமகண்டம், இராகுகாலத்தில் துவங்குவதே சரியாகும் என்று தோன்றுகிறது.பின்குறிப்பு : தோழர்களே! இக்கட்டுரை தனிநபர் எவரையுமோ அல்லது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களையோ கட்சிகளையோ இழிவு செய்யும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. மாறாக என்னையும் உள்ளடக்கி நமது தோழர்கள் மத்தியில் உள்ள நாள், நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வற்ற நிலையையும், பார்ப்பனியத்திற்குப் பலியாகிப்போயுள்ள நிலையையும் சுட்டிக்காட்டி சிந்திக்கத்தூண்டுவதற்காகவும், "இல்லை! நாள் நட்சத்திரம் பார்ப்பதால், பார்ப்பனியச் சடங்குகளை மேற்கொள்வதால் சமூகமாறுதலுக்கோ புரட்சிக்கோ, குறைந்தபட்சம் சமூக முன்னேற்றத்திற்கோ ஒரு கேடும் வந்துவிடப்போவதில்லை" என்று கருதும் தோழர்கள் மனம்திறந்து வெளிப்படையாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே தோழர்கள் திறந்தமனதோடு இதுகுறித்து ஒரு விவாதத்தை (அ) உரையாடலை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்துக்கள் என்போருக்கு இங்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஓர்வழிமுறை (சாதிரீதியான வழிமுறை) வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் பிற மதத்தினருக்கும் வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மதமற்ற, சாதியற்ற, சமூகமாற்றத்திற்காகப் போராடுபவர்கள் என்போருக்கான பண்பாட்டு வழிமுறைகள் என்ன? என்பதுபற்றிய தெளிவான வழிகாட்டல்கள் ஒவ்வொரு இயக்கத்திலும் இதுவரை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதா அல்லது அப்படி எதுவும் தேவை இல்லையா என்பது பற்றியும் தோழர்கள் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

அடிக்குறிப்பு 1 :

இவ்வளவு காலமாக சாதி இந்துக்களிடம் செல்வாக்கோடு இருந்த நாள், நட்சத்திரம், ஜாதகம் பார்த்தல் போன்ற வழக்கங்கள் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மத்தியிலும் வெகுவாகப் பரவிவருகிறது. காரைக்குடியில் ஒரு பகுதியைச் சேர்ந்த அருந்ததியரில் எவராவது ஒருவர் இறந்துவிடும்போது அப்பகுதியின் தெரு முக்கியஸ்தர்கள் நான்குநபர்கள் சோதிடரிடம் சென்று ‘இவர் இத்தனை மணிக்கு இறந்துவிட்டார், எத்தனை மணிக்கு பிணத்தை எடுக்கலாம்’ என நேரம் குறித்து வந்தே மற்ற காரியங்களைப் பார்க்கிறார்களாம்.
அச்சோதிடன் சாவுக்கு நேரம் குறித்துச் செல்ல வந்த அருந்ததியர்களைத் தன் வீட்டு வாயிலிலேயே நிறுத்தி நேரம் குறித்துக் கொடுத்து ரூ.51 தட்சணை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவானாம். இச்சோதிடம் பார்த்துச் சடலம் எடுக்கும் வழக்கம் மிகச் சமீபமாகத்தான் பரவிவருவதாகவும் முன்பு காலண்டரைப் பார்த்து நல்ல நேரம் குறித்துக் கொண்டதாகவும் கூறினர்.

அடுத்து அண்மையில் பெய்த கனமழையின்போது என் துணைவியார் வழி உறவினர் ஒருவரின் வீட்டுச்சுவர் விழுந்துவிட்டது. உடனடியாக வேறு வீடு வாடகைக்குக் கிடைக்காமல் அவர்கள் பட்ட துயரமும், வீடுதேடிப்போன இடங்களில் அருந்ததியர் என்றதால் வீடுதரமறுத்து சாதித் திமிரன்/ள் கள் கூறிய காரணங்கள் நாகரிக (?!) தமிழ்ச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியவை.

அது ஒருபுறம் இருக்க அவ்வுறவினர்கள் ஒவ்வொரு சோதிடனாகத் தேடிச் சென்று தங்களின் துயரங்களுக்கான காரணம் என்ன? என்று ஜாதகம் பார்த்து அலைந்து திரிந்தது வேதனையிலும் வேதனை.

அடிக்குறிப்பு ‡ 1 அ :

இன்றைக்குச் சில்லரை வணிகம், உள்நாட்டுச் சிறு தொழில் போன்றவை உலகமயம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் தலையீடு போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளாகி நசிந்து போய்க் கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இது மேலிருந்து அல்லது வெளியிலிருந்து திணிக்கப்படும் நெருக்கடி என்றால் பார்ப்பனியப் பண்பாட்டுத் தேவையை மையமாகக் கொண்டு இயங்குதல் என்பது சிறுதொழில், வணிகத்தின் உள்ளிருந்து அல்லது கீழிருந்து கொல்லும் நோயாக இருக்கிறது எனலாம்.

அடிக்குறிப்பு ‡ 1 ஆ :

இசுலாம் மார்க்கத்தில் இவ்வாறு நல்லநேரம் என்பது இல்லாவிட்டாலும் இன்று நடைமுறையில் இந்துக்களைப் பார்த்து இசுலாமியரும் பல்வேறு மூடத்தனங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்துக்களைப் போலவே சனியையும், செவ்வாய்க்கிழமையையும் திருமணத்திற்கு ஏற்றநாள் அல்ல என்று ஒதுக்குகின்றனர். அதுபோல் சில பகுதிகளில் சோதிடம் பார்த்தல், மந்திரித்து தாயத்துக் கட்டுதல் போன்ற வழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தங்கள் மதத்திற்குள் வந்துவிட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்யாமல் சமமாகவும் திருமண உறவுகளை மேற்கொள்ளும் அதே வேளை இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களைப் போலவே ஒதுக்கிப்பார்க்கும் வழக்கமும் நிலவுகிறது.

கிராமப்புறத்தில் இசுலாமியரிடம் இந்தவிதப் போக்குகள் மிகுந்து காணப்படுகின்றன. தமிழகக் கிறித்தவர்களைவிட இசுலாமியரிடம் பார்ப்பனியம் குறைவாகச் செல்வாக்குச் செலுத்துகிறது என்று வேண்டுமானால் கூறலாம். மற்றபடி பார்ப்பனியப் பண்பாட்டின் கொடிய விசநாக்குத் தீண்டாத மனிதர் இங்கு எவருமில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

அடிக்குறிப்பு ‡ 2 :

இந்த மூத்த தோழர் கூறுகின்ற கருத்திற்கு வலுச்சேர்ப்பது போன்ற வகையில் ‘செப்டம்பர் 2008 தீராநதி’ இதழில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. "சிண்டு வைத்த மாவோயிஸ்ட், பூணூல் அணிந்த மாவோயிஸ்ட், ருத்ராட்சக் கொட்டை அணிந்த மாவோயிஸ்ட்டுகளையும் கூடச் சந்திக்க நேரிட்டது. ‘இதெல்லாம் என்ன’ என்று அன்று மாலை உள்ளூர்த் தோழர்களிடம் கேட்டபோது ‘ஆமாம் இங்கு இது ஒரு பிரச்சனைதான்; என்ன செய்வது?. இங்குள்ள கலாச்சாரம் அப்படி’ என்று சமாளித்தார்கள்..." (தோழர். அ.மார்க்ஸ். ‘சிறைப்பட்ட வாழ்வுகள்’ கட்டுரையில்)
ஜார்கண்ட் மாநிலச் சிறையில் வாடும் மாவோயிஸ்டுகளைப் பற்றிய உண்மையறியும் குழுவில் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களையே தோழர் அ.மார்க்ஸ் மேலே குறிப்பிடுகிறார். மேலும் அ.மார்க்ஸ் இப்படிக் கூறுகிறார். "கலாச்சாரம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. கலாச்சார எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்ததுபோல இங்கு நடக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என நினைத்துக்கொண்டேன். ‘தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை’ என்று மட்டும் சொன்னேன்"

அடிக்குறிப்பு ‡ 3 :

எனக்குத் தெரிந்தமட்டிலும் ம.க.இ.க ‘பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறைகள்’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டு உள்ளதாக அறிகிறேன். அதில் கம்யூனிஸ்ட் என்பவர், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல்கள் உள்ளன. மேலும் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டிய முறையில் ஒரு சராசரி பெற்றோரிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறு மாறுபட்டுள்ளனர் என்பது பற்றியயல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதாக நினைவு. ம.க.இ.க தோழர்கள் எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்நூலைப் பிற இயக்கத்தவர் ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டாலும் கூட விவாதத்திற்குரியதாக மாற்றலாம். ஆனால் இங்கு நிலவும் கட்சித் தீண்டாமை, இயக்கத்தீண்டாமைச் சூழலில் இது பேராசைதான். மேலும் கட்சியையோ, இயக்கத்தையோ சாராத தனிநபராக செயலற்று இருந்தும். பிற அனைவரையும், அனைத்து இயக்கங்களையும் தனக்கும் தன் சிந்தனைக்கும் கீழான புழுவைப்போல் பாவிக்கும் தன்னகங்காரப் பேர்வழிகள் நிரம்பிய சூழலில் பிற இயக்க வெளியீட்டைப்படித்துப் பரிசீலிப்பதும், ஏற்றுக்கொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அழகான ஆசைதான்!
இதுபோன்ற மற்றொரு நூல் சிலிக்குயில் பதிப்பகம் 1986‡ஆம் ஆண்டு வெளியிட்டதான எரிதழல் எழுதிய ‘பண்பாடும் புரட்சியும்’ ஆகும். எரிதழல் என்ற புனைப்பெயரில் எழுதியவர் தோழர்.அ.மார்க்ஸ் என்று தெரியவருகிறது. அன்று அவர்சார்ந்திருந்த புரட்சிப்பண்பாட்டு இயக்கம் கொண்டிருந்த நிலைப்பாடாகவும் இந்நூலின் கருத்துக்களை நாம் கொள்ள முடியும்.
இந்நூலில் பண்டிகைகள், திருவிழாக்கள், கூட்டுவழிபாடுகள் பற்றியும் நம் தோழர்கள் இவற்றை அணுக வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலையும் இன்றும் வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியமானதேயாகும்.