ஆதிக்க சக்திகள் அறிவியலை எப்படியெப்படியோ தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஒழிந்து
போயிருக்க வேண்டிய புராணக் குப்பைகள், சாஸ்திரங்கள், இதிகாசங்களுக்
கெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மெருகும்,
கவர்ச்சியும், ஆர்வத் தூண்டலும் ஏற்றி இளைய தலைமுறையை ஈர்த்து, அவர்களின்
மூளையை மழுங்கடித்து வருகின்றனர்.
ஆதிக்கக் கருத்துக்களை நிலைநிறுத்த அல்லது வளர்க்க அறிவியலை உண்மைக்கு மாறாகப் பயன்படுத்தி வெற்றிபெற முயலுகின்றனர்.
அவ்வப்போது
மூக்குடைபட்டாலும் அவர்கள் சூடு,சொரணையில்லாமல் மீண்டும் மீண்டும் இந்த
அறிவியல் வழி மடமை பரப்பும் முயற்சியை கைவிடாது முயற்சித்தே வருகின்றனர்.
பிள்ளையார்
பால் குடிக்கிறார், அம்மன் கண்கள் அசைகின்றன என்று எதையாவது புதிது
புதிதாய்ச் சொல்லி, பக்தியும், கடவுள் நம்பிக்கையும் குறைந்து விடாமல்
வளர்க்க முயற்சிக்கின்றனர். அதேபோல், ஜாதியைச் சொல்வதே கேவலமாய்க் கருதும்
உளநிலை வளர்ந்து, ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருகி வந்த நிலையில், ஜாதி
யென்பது அறிவு சார்ந்தது, அறிவியல் சார்ந்தது என்பதுபோன்ற கருத்தை
அண்மையில் அறிவியல் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.
மேற்கு
வங்காளத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிஸ் என்ற
கல்வி நிறுவனத்தில், மனித மரபணுக்கள் மூலம் ஜாதி அடையாளங்களைக்
காணமுடியும் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளனர். ஜாதி யென்பது மனித மரபணு
சார்ந்தது அல்ல. அது பாதியில் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட பிரிவினை.
ஒருவன் கிறித்தவனாக இருப்பதும், இஸ்லாமியனாக இருப்பதும், இந்துவாக
இருப்பதும் எப்படி பிறப்பு வழி திணிக்கப்படுகிறதோ, அவ்வாறே ஜாதியென்ற
பிரிவும் பிறப்புவழி திணிக்கப்படுகிறது.
ஜாதி,
மதம் இரண்டும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட
கருத்து சார் அடையாளங்கள். கருத்து சார் அடையாளத்திற்கும் மரபணுவிற்கும்
எந்த வகையில் தொடர்பு வரமுடியும்? அடிப்படை தர்க்கத் தகுதிகூட இல்லாத ஒன்றை
ஆய்வு என்று சொல்லி கருத்துக் கூறுவது அறிவியல் போர்வையில் செய்யப்படும்
மோசடிச் செயலாகும். ஜாதி யென்பதுகூட இந்தியாவில் ஆரிய பார்ப்பனர்களால்
உருவாக்கப்பட்ட சதியே அல்லாமல் உலகம் முழுவதும் உள்ளதல்ல. அப்படியிருக்க
அதன் அடையாளம் எப்படி மரபணுவில் வரும். மரபணு என்ன இந்தியாவிற்கு மட்டும்
உரியதா?
இனத்தின் அடையாளங்கள்தான்
மரபணுவில் வரும். காரணம், இனம் என்பது மரபணு சார்ந்தது. ஜாதி வேறு, இனம்
வேறு. திராவிடர், ஆரியர், மங்கோலியர், சீனர் என்பன போன்று இயற்கையாய்
மரபுவழி அமைந்த பிரிவு இனம். எனவே, இது மரபணு சார்ந்தது. ஆனால், ஜாதி
யென்பது மனிதனுக்குச் சூட்டப்பட்டது. அது மரபணுவோடு தொடர்புடையதல்ல.
ஜாதிக்கும்,
இனத்திற்கும் வேறுபாடு தெரியாத அரைவேக்காடுகளின் அர்த்தமற்ற பிதற்றலே
இதுபோன்ற கருத்துக்கள். பாதியில் பிரிக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகூட இன்றைக்கு
பல காலக்கட்டத்தில் பல கலப்புகளை ஏற்று வருகிறது. எனவே, இது இன்ன ஜாதிக்கு
உரிய மரபணு என்ற கருத்தே முற்றிலும் தவறானது. வன்னியர் அனைவரின்
மரபணுவிலும் ஒரே மாதிரியான அடையாளம் இருப்பதில்லை, அவ்வாறே செட்டியார்,
ரெட்டியார், நாயுடு எல்லாம்... உண்மை இப்படியிருக்க ஜாதிய அடையாளம்
மரபணுக்களில் இருக்கிறது என்ற கருத்துப் பரப்பல்
மோசடியானது; அறிவியலுக்கும் மனித மேன்மைக்கும் எதிரானது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது தமிழ் சித்தர்
“பறைச்சி யாவ தேதடா?
பார்ப்பனத்தி யாவ தேதடா?
இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்க மிட்டிருக்குதோ?
பார்ப்பனத்தி யாவ தேதடா?
இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்க மிட்டிருக்குதோ?
என்று கேட்டுள்ளார். அவருக்குள்ள அறிவுகூட இன்றைய அறிவியலாளர்க்கு இல்லாதது வெட்கக் கேடு!
- மஞ்சை வசந்தன்http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/30235-2016-02-10-04-25-19
No comments:
Post a Comment